சென்னை: அரக்கோணம் தாலுக்காவை சேர்ந்தவர் வசந்தா(வயது 64). இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சமையல் வேலை செய்து வருகிறார். நேற்று மூதாட்டி வசந்தா கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மூதாட்டி வசந்தாவிடம் வந்து, "நீங்கள் மகாலட்சுமி போல் இருக்கிறீர்கள், ஒரு வீட்டில் குழந்தையை ஆசீர்வதிக்க வேண்டும்" எனவும், அதற்கு ஒரு கிராம் தங்க நகை மற்றும் 2,000 ரூபாய் பணம் தருவதாக மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய மூதாட்டி, அந்த நபருடன் அருகில் உள்ள அடுக்குமாடி வளாகத்திற்கு சென்றுள்ளார். அடுக்குமாடி வளாகத்தின் கீழ் தளத்தில் காலணிகள் அதிகமாக இருப்பதை காண்பித்த நபர், பல பேர் இலவசமாக நகையை பெற்று சென்றிருப்பதாக மூதாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் தங்கம் அணிந்திருந்தால் அவர்கள் நகை மற்றும் பணம் தர மாட்டார்கள் என மூதாட்டியிடம் தெரிவித்து, அந்த நகையை தான் வைத்துக் கொள்வதாக கூறி ஒன்னேகால் சவரன் கம்மலை அவர் பெற்றுள்ளார். பின்பு மேலே சென்று பார்த்துவிட்டு அழைப்பதாக கூறி சென்ற அந்த நபர் நீண்ட நேரம் ஆகியும் கீழே வராததால் மூதாட்டி அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
மூதாட்டி மேலே சென்று பார்த்த போது உடற்பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று கீழே கிடந்த காலணிகளை காண்பித்து மோசடி செய்தது தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி ஒன்னேகால் சவரன் நகையை பறித்த அந்த நபர் மீது கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் இதே பாணியில் நகை பறிப்பில் ஈடுபடும் கொள்ளையனின் விவரங்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமலை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து கொள்ளையன் திருமலையை கைது செய்து நடத்திய விசாரணையில், இதே போல மூதாட்டிகளை குறிவைத்து நகை பறிப்பில் ஈடுபட்டதும், சென்னை முழுவதும் பல காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் திருமலை மீது நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
கடந்த 2021ஆம் ஆண்டு 27 நாட்களில் 15 மூதாட்டியிடம் நகை பறித்த வழக்கில், மயிலாப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமலை சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த திருமலை மீண்டும் மூதாட்டியிடம் கைவரிசை காட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார். இதனையடுத்து கைது செய்யப்பட்ட நகை பறிப்பு திருடன் திருமலையிடமிருந்து ஒன்னேகால் சவரன் நகைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: "மக்களை தவறாக பேசும் அமைச்சர்களை ஸ்டாலின் தைரியமாக கண்டிக்க வேண்டும்" - டிடிவி தினகரன்