சென்னை கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் கரோனா சிகிச்சை மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை திறந்துவைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறவில்லை. வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம்.
கரோனா பரவலைத் தடுக்கவும், அதே வேளையில் மக்களின் வாழ்வாதாரம் காக்கும் வகையிலும் அரசு செயல்பட்டுவருகிறது. கரோனா காற்றின் மூலம் பரவும் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக வைரஸ் பரவல் குறைந்துவருகிறது.
தமிழ்நாடு அரசு, சுகாதாரத் துறை, மாநகராட்சிகள் ஆகியவை கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான முறையில் இணைந்து செயல்பட்டுவருவதால், நோய்ப் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் அரசு சார்பில் வழங்கப்பட்டுவருகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் உயிரைக் காக்க அரசு முழுமையாகச் செயல்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் இன்று 3,827 கரோனா தொற்று உறுதி