சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆவினில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 9 வகையான சிறப்பு இனிப்பு வகைகளை பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தீபாவளிக்கு சிறப்பு ஆவின் இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட உள்ளது. வியாபார நோக்குடன் அல்லாமல் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் வகையில் சேவை நோக்குடன் சிறப்பு இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது ரூ.85 கோடிக்கு சிறப்பாக விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஏற்கனவே உள்ள 275 பால் இனிப்பு வகைகள், பொருட்களுடன் 9 புதிய இனிப்பு வகைகள் தீபாவளியை முன்னிட்டு அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.250 கோடி வரை விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எல்லா இனிப்பு வகைகளும் தனியார் விற்பனை நிறுவனங்களை ஒப்பிடும் போது 20% குறைத்து தான் விற்கப்படுகிறது. அரசு துறையை சார்ந்தவர்கள் ஆவின் இனிப்பு வகைகளை வாங்க வேண்டும். கறந்த பால் கறந்த படியே சுத்தமான நெய் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகைகள். எந்தவித கலப்படமும் இல்லாத சுத்தமான இனிப்பு வகைகள். தனியார் நிறுவனங்களை விட ஆவின் பொருட்களின் விலை குறைவாக தான் உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு GST போடுகிறது. மத்திய அரசு நேர்முகமாக 5% சதவீதம் GST உயர்த்துகிறது. மறைமுகமாக 20% சதவீதம் உயர்த்துகிறது. அதனால் தான் நாமும் விலையை ஏற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். பால் விலையை குறைத்ததன் காரணமாக வருடத்திற்கு ரூ.225 கோடி இழப்பு ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு ஆவினில் 85 லட்சம் இழப்பு ஏற்படுகிறது. ஆவினில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் 20 முதல் 25 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். தீபாவளிக்கு இந்த இனிப்பு வகைகள் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது" என கூறினார்.