சென்னை: தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாலும், வகுப்புகள் திறந்தவெளியிலும், மரங்களின் நிழலிலும், ஆய்வக கட்டடங்களிலும், பாழடைந்த கட்டமைப்புகளிலும் அல்லது தற்காலிக வகுப்பறைகளிலும் நடத்தப்படுகின்றன எனவும், 2016-21 ஆண்டுகளில் அரசு நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளில் 14.76 சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 11.84 சதவீதமும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது என இந்திய கண்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ''2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்த செயல்பாடுகளும், 2021 நவம்பர் மற்றும் மார்ச் 2022 இடைப்பட்ட காலத்தில் செய்யப்பட்ட தணிக்கை குறித்த தகவல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியத் தணிக்கைத்துறை மேற்காெண்ட ஆய்வில் உயர்நிலை, மேல்நிலைக் கல்வியானது திறன்கள் மற்றும் அறிவை மேம்படுத்துவதன் மூலம் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கிறது. இந்த இன்றியமையாத செயல்பாட்டிற்காக அரசு ஆண்டிற்கு 17,000 கோடி ரூபாய் செலவிடுகிறது. கல்விக்கான வழி வாய்ப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நிதி செலவினத்தைக் கருத்தில் கொண்டு 2016-21ம் ஆண்டு காலகட்டத்தில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்விக்கு போதுமான பள்ளி வசதி உள்ளதா?, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவையான உட்கட்டமைப்பு, மனிதவளம் வழங்கப்பட்டுள்ளதா? இலவசக் கல்வி மற்றும் பிற பொருட்களை இலவசமாக வழங்குவதற்கான திட்டங்களும் ஊக்கத் திட்டங்களும் பொருளாதார ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் திறம்பட செயல்படுத்தப்பட்டனவா? என்பதையும் ஆய்வு செய்தோம்.
அதில் மாணவர்களின் மொத்த சேர்க்கை விகிதத்தின் அடிப்படையில், அகில இந்திய அளவில் மாநிலம் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், 2016-21 ஆண்டுகளில் அரசு நடத்தும் உயர்நிலைப் பள்ளிகளில் 14.76 சதவீதமும், மேல்நிலைப் பள்ளிகளில் 11.84 சதவீதமும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இருக்கிறது.
தமிழ்நாட்டில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 2,133 குடியிருப்புகளில் உயர்நிலைப் பள்ளிகளும், 1,926 குடியிருப்புகளில் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. ஆனால், 2016-2021ம் ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகள் தரம் உயர்த்துவதற்கான விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை. தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர் பணியாளர்கள் இல்லை.
கல்விக்கான நிதி ஒதுக்கீடு 2016-17ல் மாநில மொத்த உள்நாட்டு வருவாயில் 0.94 சதவீதமாக இருந்தது. 2020-21ல் கல்விக்கான ஒதுக்கீடு 0.85 சதவீதமாக குறைந்துள்ளது. ஆசிரியர்களைப் பணிக்குத் தேர்வு செய்யாததால், அனுமதிக்கப்பட்ட பணியிடங்களை விட காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்பட்டது. இதனால் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட 1,18,914 ஆசிரியர்களில் 1,00, 052 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். 18,862 ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆட்சேர்ப்பு தாமதமானது. காலியிடங்கள் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது.
மாநில அளவில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதாலும், வகுப்புகள் திறந்தவெளியிலும் , மரங்களின் நிழலிலும், ஆய்வக கட்டடங்களிலும், பாழடைந்த கட்டமைப்புகளிலும் அல்லது தற்காலிக வகுப்பறைகளிலும் நடத்தப்படுகின்றன. புதிய வகுப்பறைகள் கட்டப்படும் தற்போதைய வேகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளி குறையாது.
முறையான கட்டட உரிமங்கள், சுகாதாரச் சான்றிதழ்கள் மற்றும் தீ பாதுகாப்புச் சான்றிதழ்கள் இல்லாமல் இயங்கும் பள்ளிகள் , மாணவர்களுக்குத் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. மாணவர்களை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்திற்காக ஆண்டிற்கு 2400 கோடி செலவில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் அனைத்து நிலைகளிலும் திறமையற்ற செயல்பாட்டினால் பாதிக்கப்பட்டது.
ஆண்கள் கழிப்பறை இல்லாத பள்ளிகள் 135, பெண்கள் கழிப்பறை இல்லாத பள்ளிகள் 20, சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான கழிப்பறை இல்லாத பள்ளிகள் 1,966 , விளையாட்டு மைதானம் இல்லாத பள்ளிகள் 898 என கண்டறியப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான இலவச லேப்டாப், காலணிகள், பள்ளிப் பை வழங்கல் திட்டங்களை செயல்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் இலவசப் பொருட்கள் தாமதமாக வழங்கப்படுதல் ஆகியவற்றால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு பலன்கள் அளிப்பதில் பாதிப்பு, வீண் செலவு, அரசு நிதியின் தேவையற்ற முடக்கம் ஆகியவை ஏற்பட்டது.
பள்ளிகளை தரம் உயர்த்துவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும். இலவச திட்டங்கள் சரியாக வழங்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்'' என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவல் துறையில் 'சட்ட ஆலோசகர்' என்ற புதிய பணியிடம் உருவாக்கப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு!