நடந்து முடிந்த 17ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் தவிர ஏனைய அனைவரும் தோல்வியடைந்தனர்.
ரவீந்திரநாத் வெற்றிபெற்றுள்ள நிலையில், தனது மகனுக்காக ஓ. பன்னீர்செல்வம் மத்திய அமைச்சரவையில் இடம் கேட்டு மோடி, அமித் ஷாவிடம் கோரிக்கை வைத்ததாக பரவலாக பேசப்பட்டுவந்தது.
அதனை உறுதிசெய்யும் வகையில் வாரணாசிக்குச் சென்று பிரதமர் மோடியை ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கும் நரேந்திர மோடியின் அமைச்சரவையில், தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2014ஆம் ஆண்டு குமரி மக்களவைத் தொகுதியில் பாஜக உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பொன். ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டிற்கு ஒரே மத்திய அமைச்சராக இருந்தார். ரவீந்திரநாத் குமாருக்கு கேபினெட்டில் கப்பல் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொறுப்பு கிடைக்கும் என அதிமுக-பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.