தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 - 2021ஆம் ஆண்டிற்கான தேர்தல் நவம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் டிஆர் தலைமையில் ஒரு அணியும், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் தேனப்பன் தலைமையில் ஒரு அணியும், தயாரிப்பாளர் விஜயசேகரன் தலைமையில் ஒரு ஆணியும் என மொத்தம் நான்கு அணிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், சென்னை தி. நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணியின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் தேனாண்டாள் முரளி 'தயாரிப்பாளர் நலம் காக்கும் அணி' என்று தங்களின் அணியின் பெயரை அறிவித்தார் .
இதனைத் தொடர்ந்து தங்கள் அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்தவர். அதுமட்டுமல்லாது அணியின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், தொடர்ந்து 25 வருடங்கள் சந்தா கட்டி வந்த நிறுவனங்கள் ஆயுள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்க தீர்மானம் நிறைவேற்றுவோம். சிறு முதலீட்டு படங்களுக்குத் திரையரங்குகள் கிடைக்க உறுதியான நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு சிரமமில்லாமல் மருத்துவக் காப்பீடு கிடைக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவோம். சங்கத்தின் நிதி நிலைமைகள் சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட 43 தேர்தல் வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தன.
இதனைத் தொடர்ந்து பேசிய தேனாண்டாள் முரளி, தங்கள் அணியில் இருப்பவர்கள் அனைவரும் தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.
அவர்களின் வழிகாட்டுதலின் படி கடந்த நிர்வாகத்தில் நடைபெற்ற சீர்கேடுகள் நடைபெறாமல் காக்கவும் சிறு படத் தயாரிப்பாளர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும் அவர்களின் நலன் காக்கவும் முனைப்போடு செயல்படுவோம் என்று தெரிவித்தார்.