சென்னை மயிலாப்பூர் சுற்றியுள்ள ராயப்பேட்டை, ஐஸ் ஹவுஸ், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் செல்போன் திருட்டு அதிகம் நடப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகார் அளித்த வண்ணம் இருந்தனர். புகாரையடுத்து தனிப்படை காவல்துறையினர் செல்போன்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தற்போது கடந்த ஒராண்டாக காணாமல் போன 49 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இது குறித்து, மயிலாப்பூர் காவல் உதவி ஆணையர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “மயிலாப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் செல்போன் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக கடந்த ஒராண்டாக பல புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து செல்போன் திருடர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் காணாமல் போன ஐஎம்இ எண்களைக் கொண்டு ஆய்வு செய்தபோது காணாமல் போன செல்போன்கள் அனைத்தும் தமிழ்நாடு, வெளிமாநிலங்களில் உபயோகத்தில் இருப்பது தெரியவந்தது. அவற்றின் அடிப்படையில் பல பகுதிகளில் இருந்த 49 செல்போன்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
செல்போன் திருட்டுச் சம்பவங்களில் பெரும்பாலும் சிறார்களே ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவ்வாறு ஈடுபடும் சிறார்களுக்கு மனவள ஆலோசனை வழங்கப்படும்” என்றார்.