சென்னை: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாகம் சார்பில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரில் அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏடிஎம் மிஷினில் நூதன முறையில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்வதாகப் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக கடந்த ஜூலை மாதம் இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக அண்ணா சாலை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஏடிஎம்மில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முயலும் போது, பணம் மிஷினில் இருந்து வெளிவராமலேயே, வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுத்தது போல் குறுஞ்செய்தி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஏடிஎம் மிஷின் மற்றும் வங்கி தரப்பில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் பணம் மிஷினிலிருந்து வரவில்லை என பொதுமக்கள் நினைத்துக்கொண்டு சென்றுள்ளனர். ஆனால், இது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்ததை அடுத்து தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிர்வாகம் ஏடிஎம் மிஷினில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளது. அதில் மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் மிஷினில் பணம் வெளிவரும் வாயில் பகுதியில் டேப் மற்றும் ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தி பணம் வெளியே வர முடியாத படி தடுத்து நிறுத்தியது பதிவாகியுள்ளது.
ஒருவர் கார்டை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சிக்கும்போது கடைசி கட்டத்தில் பணம் வெளிவரும் போது, மர்ம நபர்கள் ஏடிஎம்மில் பொருத்திய டேப் மற்றும் ஜெல்லில் ஒட்டிக்கொள்ளும். இதனால் பணம் வெளிவர முடியாதபடி மாட்டிக்கொள்ளும். ஆனால், ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி சென்றுவிடும்.
மிஷின் பிரச்னை அல்லது வங்கி கணக்கில் பிரச்னையா என வாடிக்கையாளர்கள் குழப்பத்தில் அந்த ஏடிஎம்மில் இருந்து சென்று விடுகின்றனர். அதன் பின் மர்ம நபர்கள் பணம் வெளிவரும் வாயில் பகுதியில் உள்ள டேப் மற்றும் ஜெல்லை எடுத்த உடன் பணம் வெளிவரும்.பின், அதை எடுத்துச்செல்கின்றனர் என வங்கி நிர்வாகம் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரே மாதிரியான நபர், ஏடிஎம்மில் கொள்ளை அடிப்பது தெரியவந்துள்ளது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி கொடுத்தப்புகாரின் அடிப்படையில் 15 பணப் பரிவர்த்தனைகளில் ரூ.28,400 பணம் கொள்ளை போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைப் பொறுத்த வரையில் புகார் அளிக்காமல் எத்தனை வங்கி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
எவ்வளவு பணம் கொள்ளைபோனது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மற்ற தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஏடிஎம்களில் மட்டும் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளதா? மற்ற வங்கி ஏடிஎம்களிலும் இது போன்று மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளார்களா? என தீவிர விசாரணை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த மூன்று வருடத்திற்கு முன்னால் எழிலகம் பகுதியில் வாக்ஸ் எனப்படும் ஒட்டும் தன்மையைக் கொண்ட பொருளை பயன்படுத்தி, ஏடிஎம்மில் இதுபோன்று கொள்ளைச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில் தொடர்புடைய நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் வேலை எனக்கூறி இலங்கைவாசிகளை சென்னை அழைத்து வந்தவர் கைது