பரபரப்பான சென்னை மாநகரம் கரோனா பரவலால் முடங்கி கிடக்கிறது. சென்னை மெரினா கடற்கரையும், மக்கள் அதிகமாகக் கூடும் மால்களும், சினிமா தியேட்டர்களும் முடங்கிக் கிடக்கின்றன. பொதுமுடக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமல்ல இறைதேடி அலையும் பறவைகளும் உணவின்றி தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் விஜய பிரியா என்ற பெண்மணி பறவைகளுக்கு நாள்தோறும் உணவளித்து வருகிறார்.
சென்னை பம்மல் பகுதியைச் சேர்ந்தவர் விஜய பிரியா. அதிகாலை சூரியன் உதிக்கும் நேரத்தில் தனது கடமை தவறாது, சொந்த பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது போல் கிளிகளுக்கும், காக்கைகளுக்கும், புறாக்களுக்கும் தனது வீட்டு மாடியில் உணவு வழங்கி வருகிறார். அடுக்குமாடி கட்டடங்களும், இடைவெளி விடாது வீடுகளாய் நிரம்பியிருக்கும் தெருக்களாய் உள்ளது சென்னை மாநகரம். இந்தச் சூழலில் எங்கிருந்தோ வரும் பறவைகள் கூட்டத்தை கண்டால் அது விஜய பிரியாவின் வீடு என்றே கூறலாம்.
விஜய பிரியாவிற்கும் பறவைகளுக்கும் இருக்கும் உறவை பார்க்கவே ஆச்சரியமாக உள்ளது. காலையிலும் மாலையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகள் அவரது வீடு தேடி வருகின்றன. பறவைகளே உங்களுக்காக நீரும், உணவும் மாடியில் வைத்திருக்கிறேன், நீரைக் குடித்துவிட்டு பிறகு உணவை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவதைப் போல ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு காட்டும் அன்பு பரிமாற்றத்தை உணர்த்துகிறது.
தினமும் காலையும், மாலையும் அந்த அரை மணிநேரம் அவரது வீட்டு மொட்டை மாடி பறவைகளின் சரணாலயம் போல் காட்சியளிக்கிறது. விஜய பிரியாவின் வீட்டைச் சுற்றியுள்ள மா மரத்திலும், தென்னை மரத்திலும் நூற்றுக்கணக்கான கிளிகள் வந்து குவிந்து கிடக்கின்றன. இந்த பெருநகரத்தில் இவ்வளவு கிளிகளும், பறவைகளும் வாழ்கின்றனவா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. விஜய பிரியா கடந்த ஆறு வருடங்களாக பறவைகளுக்கு உணவளித்து வருகிறார். இதுவரை சோர்ந்து போனதில்லை. பறவைகளை காக்க வேண்டியது நமது கடமை. இந்த நகரத்தில் வாழும் பறவைகள் உணவிற்காக எங்கே செல்லும் என்று கேள்வி எழுப்புகிறார்.
மனிதனின் வாடை தெரிந்தாலே பறந்தோடிவிடும் கிளிகள் இத்தனை பரபரப்பான ஒரு இடத்தில் நூற்றுக்கணக்கில் வந்து அமைதியாகவும் சுதந்திரமாகவும் உணவருந்தி விட்டு செல்கிறது என்றால் அதற்கு காரணம் விஜய பிரியாவின் மீது பறவைகள் வைத்திருக்கும் பாசம்தான்.
ஆறு வருடங்களாக பறவைக்கு உணவளிக்கிறேன்
இது குறித்து விஜயபிரியா கூறியதாவது, "விடியற்காலையில் பறவைகள் கூட்டில் தன் குஞ்சுகளை விட்டுவிட்டு, இறை தேடி பறந்து பறவை கூட்டத்திற்கு உணவளிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பறவைகள் உணவு உண்பதை மறைந்திருந்து ரசித்திருக்கிறேன். சில மாதத்திற்கு முன்பு ஒரு பச்சைக்கிளி சாலையில் அடிபட்டு கிடந்தது. அதை வீட்டிற்கு எடுத்து வந்து சிகிச்சையளித்து பறக்கவிட்டேன். அடுத்த நாள் முதல் பச்சைக்கிளிக்கும் உணவு வைக்க தொடங்கினேன்.
தற்போது, வீட்டு மாடியில் ஆயிரக்கணக்கான கிளிகள் வந்து செல்கின்றன. அதே மாதிரி காக்கைகளும் வந்து செல்கின்றன. பறவைகளுக்கு கடந்த ஆறு வருடங்களாக உணவளித்து வருகிறேன். ஒருநாள் கூட சலிப்படைந்ததில்லை. பெற்ற பிள்ளைகளுக்கு வழங்குவதை போல் உணவளித்து வருகிறேன். காகைக்கு பால் சாதம், தயிர் சாதம் கிளிகளுக்கு ஊற வைத்த அரிசி, புறாக்களுக்கு திணை என பறவைகளுக்கு என்ன பிடிக்கும் என்பதை பார்த்து பார்த்து செய்கிறேன்.
என்னைக் கவர்ந்த ஒற்றைக் கண் காக்கை
இதுவரைக்கும் கையில் ஊட்டி பழக்கமில்லை, ஒற்றக்கண் காக்காய் என்கூட சகஜமாக பழக ஆரம்பித்துவிட்டது. சின்னபிள்ளைபோல் தட்டில் பால் சாதம் வைத்திருப்பேன், ஒரு வாய் எடுத்துவிட்டு பறந்து செல்லும் அப்புறம் மறுபடியும் வந்து சாப்பிடும் இது பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
எங்க அம்மா செய்ததை பின்தொடர்வோம்
விஜய பிரியா போன்றே அவரது மகன் கீர்த்தி வாசன் கூறியதாவது, ஒரு திசையிலிருந்து கிளிக்கூட்டம் கீச் குரலோடு வந்து உணவருந்தும். மற்றொரு திசையிலிருந்து வரும் புறாக்கள் அம்மா வைக்கும் அரிசி திணையை சாப்பிடும். மாடி பக்கம் யாராவது வந்த பறவைகள் பறந்து போகும். எங்க அம்மா இருந்தா அதுங்க பாட்டுக்க அரிசியை சாப்பிட்டு பறந்து சென்றுவிடும். இதுவரைக்கும் ஒரு நாள் கூட உணவு வைக்க தவறியதில்லை. வெளியூர் சென்றால் கூட பறவைகளுக்கு உணவை எடுத்து வைத்துவிட்டு பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிவிட்டு செல்வோம்.
எனக்கே சில நேரத்தில் ஆச்சரியமாக இருந்தது, சென்னையில் நூற்றுக்கும் அதிகமான பச்சைக்கிளிகள் இருக்கின்றனவா. பறவைகள் கூட்டம் பார்க்கவே அழகா இருக்கு. எங்க அம்மா தொடங்கி வைத்ததை கண்டிப்பாக பின்தொடர்வோம்" என்றார்.
சூழ்நிலை மாற்றங்கள் பிரச்னைகள் இதையெல்லாம் கடந்து நம்மோடு வாழ்கின்ற ஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பது நம்முடைய கடமை என்பதை விஜய பிரியாவும் அவரது குடும்பத்தினரும் உணர்த்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அமெரிக்க தேர்தல் பற்றியா முருகனும் நளினியும் பேசப் போகிறார்கள்? - நீதிபதி கிருபாகரன்