இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் றை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக, இதுவரை கரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கும்வகையில், தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளைச் சுற்றியுள்ள 5 கி.மீ. தொலைவு வட்டத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், கூடுதலாக 2 கி.மீ. தொலைவு வட்டத்தை இடைப்பட்ட பகுதியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிக்குள் உள்ள அனைத்து வீடுகளிலும் சுகாதாரக் குழுக்கள் சென்று இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ள நபர்களைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும், நோய் தொற்று கண்டறியப்பட்ட நபரின் தொடர்பிலிருந்த நபர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டது.
அதனடிப்படையில், நேற்றுவரை 12 மாவட்டங்களில், இரண்டாயிரத்து 271 களப் பணியாளர்கள் மூலம் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியில் இதுவரை மூன்று லட்சத்து 96 ஆயிரத்து 147 பேரிடம் உடல்நலம் குறித்து கணக்கெடுக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க:தனிமைப்படுத்தப்பட்டு வீட்டு கண்காணிப்பில் உள்ளவர்களிடம் போனில் ஆறுதலாக பேசிய அமைச்சர்!