சென்னை: சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள ஹானர்ஸ் படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் ஐந்து ஒருங்கிணைந்த சட்டப்படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரையில் பெறப்பட்டது. சீர்மிகு சட்டப்பள்ளியில் உள்ள ஹானர்ஸ் படிப்புகளில் சேர்வதற்கு 5300 மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்தனர்.
அவர்களில் பி.ஏ எல்.எல்.பி, பிபிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) பட்டப் படிப்பில் சேர்வதற்கு 3,444 மாணவர்களும், பிகாம் எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்பில் சேர்வதற்கு 1,063 மாணவர்களும், பிசிஏ எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்பில் சேர்வதற்கு 403 மாணவர்கள் என 4,910 மாணவர்கள் தகுதிப்பெற்றுள்ளனர்.
இதில் 373 மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பட்டுள்ளன. மேலும் மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண்கள், தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் கலந்தாய்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீர்மிகு சட்டப் பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த சட்டபடிப்பு பிரிவுகளின் கீழ் தலா 156 இடங்கள் உள்ளன. மேலும் தமிழ்நாட்டில் 14 அரசுச் சட்டக் கல்லூரிகள், சரஸ்வதி சட்டக்கல்லூரியில் சேர விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என சட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார்.