சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. கடந்த மாதம் 29ஆம் தேதி கத்திரி வெயிலின் தாக்கம் முடிவடைந்த நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தது. குறிப்பாக சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 43 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இந்த நிலையில் நேற்றும் (ஜூன் 5), இன்றும் (ஜூன் 6) சென்னையில் மிதமானது முதல் கனமழை பெய்தது.
சென்னையில் வில்லிவாக்கம், பெரம்பூர், வடபழனி, அசோக் நகர், மெரினா கடற்கரை, காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை, தி.நகர், வேப்பேரி, சென்ட்ரல், பாரிமுனை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்தது. காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பணிக்கு செல்லும் ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தென் மேற்கு பருவமழை தாமதம் அடைந்துள்ளது எனவும், இந்த தாமதத்தின் காரணமாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது எனவும், ஜூன் 8 அல்லது ஜூன் 9ஆம் தேதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த புயல் சின்னமானது வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் புடலூர் (தஞ்சாவூர்) 10 செ.மீ, வேப்பூர் (கடலூர்), நன்னிலம் (திருவாரூர்), பண்ருட்டி (கடலூர்), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்) தலா 7 செ.மீ, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கோடியக்கரை (நாகப்பட்டினம்) தலா 6 செ.மீ, நந்தியார் (திருச்சி), முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆவின் பால் பண்ணையில் குழந்தை தொழிலாளர்கள்; திடீர் போராட்டத்தால் பரபரப்பு