சென்னை: நண்பனின் பிறந்த நாள் என பெற்றோரிடம் கூறி விட்டு, மாணவர்கள் சிலர் குழுவாக சேர்ந்து தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து, போதை ஊசி போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சக மாணவர் ஒருவருக்கு போதை அதிகமானதாகவும், இதனால் ஏற்பட்ட வலிப்பால் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று(நவ. 26) இரவு மாணவர்கள் சிலர் ஒரு மாணவரை தூக்கிக் கொண்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அந்த மாணவரின் பெயர் ராகுல் என்று புற நோயாளிகள் பதிவில் குறிப்பிடப்பட்டது. ராகுலுக்கு என்ன ஆனது என்று சக மாணவர்களிடம் கேட்டவாறு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக மாணவர் ராகுல் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர்கள் கூறிய தகவலை கேட்டு அதிர்ந்துபோன சக மாணவர்கள், யாரிடமும் தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த ராயப்பேட்டை அரசு மருத்துவமனை நிர்வாகம், சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையில் உயிரிழந்தது ராகுல் என்ற மாணவர் எனவும், அவர் போதை ஊசி போட்டுக்கொண்டு போதை அதிகமானதால் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து உடனடியாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், ராகுலின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
தொடர்ந்து மாணவரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், சக மாணவர்கள், தனியார் விடுதி நிர்வாகம் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு போதை ஊசி எங்கிருந்து கிடைத்தது? யார் மூலம் கிடைக்கப்பெற்றது, என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலி சான்றிதழ் மூலம் விசா எடுக்க முயற்சி முதல்.. பாஜக - திமுக நிர்வாகிகள் மோதல் வரை சென்னை குற்றச் செய்திகள்!