இதுகுறித்து முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசு கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
அதே வேளையில் இதனால் பொதுமக்கள் பாதிப்படையாமலும், அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
வெளிமாநில தொழிலாளர்களுக்குத் தேவையான இருப்பிடம், உணவு, மருத்துவ வசதிகளை அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களே ஏற்பாடு செய்ய வேண்டும்.
அதனை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களில் யாராவது, பணியிலிருந்து வெளியேறி வேறு நகரங்களுக்கோ, அவர்களின் சொந்த ஊருக்குச் செல்ல முயற்சித்தோ தவித்துவந்தால், அவர்களைத் தற்காலிக முகாம்களில் தங்க வைத்து மாநிலப் பேரிடர் நிவாரண நிதியின் மூலம் உணவு, மருத்துவ வசதி செய்து தர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மாணவர்கள், முதியோர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு அடிப்படை, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க பல்வேறு பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்களைக் கொண்ட ஒன்பது சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாத இறுதியில் ஊதியம் வழங்குவதை உறுதி செய்யப் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளப் பட்டியலைத் தயாரிக்க, அந்தந்த நிறுவனங்களின் இரண்டு அல்லது மூன்று ஊழியர்களுக்கு மார்ச் 30, 31, ஏப்ரல் 01 ஆகிய தேதிகளில் அவகாசம் அளிக்கப்படும்.
அதற்கு மாவட்ட ஆட்சியர்கள், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மூலம் அனுமதி அளிக்கப்படும்.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் பேரிடர் மேலாண்மை சட்டப்படி, தொழில் வர்த்தக சபை, தனியார் மருத்துவமனைகள் நிர்வாக இயக்குநர்கள், மருத்துவ வல்லுநர்கள், மருந்தக தயாரிப்பாளர்கள், வேளாண்மை, கால்நடைப் பராமரிப்பு, மீன்வளம், அரசு, தனியார் துறையைச் சார்ந்த முகவர்கள், உணவுத் தயாரிப்பாளர்கள், விற்பனையார்கள், அரசு சாரா அமைப்பினர் , நுகர்வோர்கள் ஆகியோர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அவசரக்கால மேலாண்மைக் குழு அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்கள், வாகனங்கள் மூலம் அத்தியாவசிய பொருள்களைத் தேவையான இடங்களுக்கு எடுத்துச் சென்றும், சமூக விலகலை பின்பற்றியும் அத்தியாவசியப் பொருட்களை விற்பனைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்த நோயாளிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்களை அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி மற்ற நபர்களின் தொடர்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக வருகின்ற இரண்டு மாதங்களில் 1.5 லட்சம் தாய்மார்கள் பிரசவிக்கப் போவதாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவ அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்தவும், அதற்கான உதவிக்கு 102, 104 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுவாசக் கோளாறுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரையும் கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள், அத்தகைய நோய் உள்ளவர்கள் குறித்து சுகாதாரத் துறைக்குத் தகவல் அளிக்க வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில இடங்களில் குறிப்பாக மீன், இறைச்சி, காய்கறி கடைகளில் சமூக விலகல் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் செயல்படுத்த கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை