சென்னை: தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா (62). இவர் விமான நிலையத்தில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.
செப்டம்பர் 30ஆம் தேதி கருப்பையா வெளியூருக்கு சென்றிருந்தார். இந்நிலையில் அவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருபதை கண்ட அக்கம்பக்கத்தினர், பீர்கன்காரணை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன் அடிப்படையில், அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கருப்பையா வீ்ட்டிலிருந்த 6 பவுன் நகை, வெள்ளி பொருள்கள், கார் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் கொள்ளையர்களை காவல்துறையினர் தேட ஆரம்பித்தனர். அப்போது கார் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதை ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து தடுப்புகளை உடைத்து வேகமாக சென்ற காரை ரோந்து காவல்துறையினர் விரட்டி பிடித்தனர். அதன்பின் காரையும் கொள்ளையனையும் பீர்கன்காரனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அவனிடம் நடத்தப்பட்ட விசாரணயில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது படப்பையை சேர்ந்த வினோத் (19) என்பது தெரியவந்தது. அவன் மீது ஏற்கனவே இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன.
மேலும் வினோத்திடமிருந்து 6 சவரன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம், கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி வினோத் சிறையில் அடைக்கப்பட்டான்.
இந்த கொள்ளை சம்பவத்தில் வினோத்துக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரை கட்டிப்போட்டு ரூ.20 லட்சம் பணம், சொகுசு கார் கொள்ளை!