சென்னை: பி.ஆர்க் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த 2,491 மாணவர்களில் தகுதியான 1,607 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 38 பி.ஆர்க் கல்லூரியில் 1,609 இடங்கள் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்னரே 2 இடங்களில் சேர்வதற்குத்தகுதியான மாணவர்கள் இல்லாத நிலை உள்ளது.
பி.ஆர்க் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு ஜூன் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதி வரையில் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் 2,491 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் தகுதியான 1,607 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகள் 3 பேரும், விளையாட்டு வீரர்கள் 22 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 18 பேரும், அரசுப் பள்ளி மாணவரில் விளையாட்டு வீரர் ஒருவரும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களில் நாட்டா தேர்வில் தகுதிப்பெற்ற 1,114 மாணவர்களும், ஜெ.இ.இ மாணவர்கள் 70 பேரும், நாட்டா மற்றும் ஜெ.இ.இ தேர்வில் 423 பேரும் தகுதிப்பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 38 பி.ஆர்க் கட்டடக்கலைக் கல்லூரியில் 1,609 இடங்கள் ஒற்றைச்சாளர கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது. தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மையங்களில் 6, 7ஆம் தேதிகளில் தெரிவிக்கலாம்.
சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டு கலந்தாய்வு 8ஆம் தேதி நடைபெறும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், பொதுப்பிரிவு கலந்தாய்வு வரும் 9, 10ஆம் தேதி நடைபெறும். 11ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு செய்யப்படும். 12ஆம் தேதி ஒதுக்கீட்டை மாணவர்கள் உறுதிசெய்யவோ, மேல் நோக்கி செல்வதற்கோ உறுதிச் செய்ய வேண்டும் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இந்த ஆண்டு விண்ணப்பம் குறைவு