சென்னை: குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 4 நாட்கள் பயணமாக கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 05) இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் முதுமலை சென்றார்.
அதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழகத்தின் 167 வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ மாணவிகளுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார். அதன் பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக, சென்னையிலிருந்து புதுச்சேரி மாநிலம் புறப்பட்டுச் சென்று அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். குறிப்பாக, புதுச்சேரி ஜிப்மரில் 17 கோடி ரூபாய் செலவில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரம் மற்றும் வில்லியனூரில் 10 கோடி ரூபாய் செலவில் ஆயுஷ்மான் மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: இந்துக்களுக்கு எதிரானது பாஜக.. பாஜக அரசின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பு.. பிரதமர் பதவி விலக திருமாவளவன் கோரிக்கை!
இந்த நிலையில் நான்கு நாட்கள் பயணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வந்திருந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொண்டு.இன்று (ஆகஸ்ட் 08) மாலை புதுச்சேரியில் இருந்து இந்திய விமானப்படை தனி ஹெலிகாப்டரில் சென்னை பழைய விமான நிலையம் வந்தடைந்தார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் கீழடி வரலாறு மற்றும் அகழாய்வு குறித்து ஒடியா மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட "காலப்பேழை" என்கிற புத்தகத்தை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு வழங்கினார். பின்னர் வழி அனுப்பும் நிகழ்ச்சியை முடித்துக் கொண்ட குடியரசு தலைவர் சென்னை விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தின் மூலமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் இருந்து திரிணாமுல் எம்.பி. இடைநீக்கம்.. எஞ்சிய கூட்டங்களில் பங்கேற்க தடை!