சென்னை: சென்னை - வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் தனியார் கல்வி இல்லம் இயங்கி வருகிறது. இந்த இல்லத்தின் இயக்குநராக கடந்த 2000ஆம் ஆண்டு முதல் கல்யாண சுந்தரம் என்பவர் இருந்து வந்துள்ளார்.
இந்த இல்லத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு உண்டான கல்வித்தொகையை வழங்கி, தங்கிப்படிக்கவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு, சுமார் 23 சிறுமிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.கரோனா காரணமாக 5 சிறுமிகள் தங்களது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறார் இல்லத்தில் தங்கி வந்த சிறுமி ஒருவர் குழந்தைகள் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு இயக்குநர் கல்யாண சுந்தரம் தனக்கும், இல்லத்தில் வசித்து வரக்கூடிய சிறுமிகளுக்கும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், அவர் மட்டுமில்லாமல் கல்யாண சுந்தரத்தின் சகோதரர், மகன் சிறுமிகளை கல்லூரிகள், பள்ளிகளுக்கு அழைத்துச் செல்லும் வழியில் தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குழந்தைகள் நலப்பிரிவு தனிப்படை காவலர்கள் சிறார் இல்லத்திற்கு விரைந்து சிறுமிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், கல்யாண சுந்தரம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகியுள்ளது.
உரிமம் பெறாமல் கல்யாண சுந்தரம் சிறார் காப்பகத்தை நடத்தி வருவது கண்டறியப்பட்டு, சிறார் காப்பகத்திற்கு சீல் வைத்த காவலர்கள் 18 சிறுமிகளை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும், தலைமறைவாக இருந்து வரும் கல்யாண சுந்தரத்தை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
குறிப்பாக, இந்த சிறார் இல்லத்திற்கு பிரபல இசையமைப்பாளர்கள் பலர் நிதி அளித்து உதவிவந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: ரயில்வே ஊழியர் கைது