சென்னை: எழும்பூரில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் அலுவலக உதவியாளராக உஷா என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி பணியை முடித்துவிட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஓய்வறையில் படுத்து தூங்கி இருக்கிறார்.
காலையில் கண்விழித்து பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கத் தாலியை காணவில்லை என அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இது குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் உஷா புகார் அளித்ததன் அடிப்படையில் எழும்பூர் காவல்துறையினர் ஆரம்ப சுகாதார நிலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அதில் அன்றிரவு வெளியே இருந்து வந்து யாரும் திருடவில்லை எனத் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்களிடம் சினிமா பட பாணியில் நூதனமான முறையில் விசாரணையைத் தொடங்கினர்.
தங்க நகையினை திருடியது மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் தான் என்பதை உறுதி செய்து கொண்டு, மேலும் மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே அரசு ஊழியர்கள் என்பதால் அவர்களிடம் இருந்து திருடிய நகையை மீட்பதற்காக, நூதனமான ஒரு வழியை கையாண்டனர்.
அதன் அடிப்படையில் ஒரு அறையை காண்பித்து இந்த அறையில் மருத்துவமனையில் உள்ள 11 ஊழியர்களின் கண்களைக் கட்டி, எடுத்தவர்கள் யாராக இருந்தாலும் அந்த அறையினுள் ஒரு பை இருப்பதாகவும், அந்தப் பையில் திருடிய தங்கத் தாலியை போட்டு விட்டால் காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படமாட்டார்கள் என்றும்; இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
பின்னர் 18ஆம் தேதி காலை காவல் ஆய்வாளர் முன்னிலையில் ஒவ்வொருத்தர் உடைய கண்கள் கட்டப்பட்டு அறைக்குள் அனுப்பப்பட்டனர். 11 பேரும் சென்று வந்த பின்பு சிறிது நேரம் கழித்து காவல் அதிகாரிகள் உள்ளே சென்று சோதனை செய்த போது ஐந்து சவரன் தங்கத்தாலி இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து நகையை பறிகொடுத்த உஷா கண்கலங்கி பெருமகிழ்ச்சியுடன் காவல்துறைக்கு நன்றி தெரிவித்தார். மேலும் காவல்துறையின் நூதன முறையை உயர் அதிகாரிகள் பாராட்டினார். ஐயா திரைப்படத்தில் வருகின்ற வடிவேலு பட காட்சியை போல காவல்துறையினர் கையாண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க: மதுபோதைக்கு அடிமையானதால் தாய் கண்டிப்பு: விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி தற்கொலை