சென்னை: அமைந்தகரை எம்.எச்.காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முனியம்மாள், இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகன் விஜய் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பாக மகன் விஜய் வேலைக்கு செல்வதற்காக புதிய இருசக்கர வாகனத்தை ஆனந்தராஜ் வாங்கி கொடுத்துள்ளார்.
இந்த வாகனத்தை கடந்த டிசம்பர். 10ஆம் தேதி வழக்கம் போல வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றிருந்த நிலையில், நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இருசக்கர வாகனத்தை பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தில் தீ பரவி எறிய தொடங்கியவுடன் ஆனந்தராஜ் வளர்த்து வரும் நாய் குறைக்கவே சத்தம் கேட்டு உடனடியாக ஆனந்தராஜின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வெளியே வந்து பார்த்துள்ளனர். புதிய இருசக்கர வாகனம் எரிவதைக் கண்டு அவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இது தொடர்பாக ஆனந்த் ராஜின் மகள் கனகவல்லி என்பவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்டமாக சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது ஆட்டோவில் வந்த அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் இருசக்கர வாகனத்தின் மீது பெட்ரோலை ஊற்றி விட்டு செல்வதும், பின்னர் மற்றொரு நபர் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி விடுவதும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த சிசிடிவியில் பதிவான ஆட்டோவில் ஒட்டியிருந்த ஸ்டிக்கரை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி உள்ளனர். ஆட்டோ சென்ற இடங்களிலுள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அமைந்த கரையைச் சேர்ந்த சரவணன் (37), பாடியைச் சேர்ந்த அலெக்ஸ்(21), முகப்பேரைச் சேர்ந்த ஸ்டீபன் (19) ஆகியோர் என்பது தெரிய வந்தது. ஆனந்தராஜ் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் சரவணன், இடப்பிரச்சினை தொடர்பாக இவருக்கும் ஆனந்தராஜுக்கும் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் சரவணன் மீது கஞ்சா விற்பனை செய்வதாகக் கூறி ஆனந்தராஜ் ஏற்கனவே அவர் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகார் ஒன்று நிலுவையில் இருந்து வருகிறது. இதே போல சரவணன் தனது மனைவி அனு மீது கல்வீசியதாக ஆனந்தராஜனின் மகன் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விஜய் அண்மையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக சரவணன் ஆள்வைத்து இருசக்கர வாகனத்தை எரித்தது தெரியவந்துள்ளது.