திருநெல்வேலி: குலுக்கல் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன். இவர் யூடியூபில் காய்கறி விற்பனை செய்வது சம்பந்தமான விளம்பரத்தை யூட்யூப்பில் பார்த்து அதில் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு காய்கறி வியாபாரம் செய்வதற்காக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தியுள்ளார்.
இந்நிலையில், காய்கறி வியாபாரத்திற்கான எந்தத் தகவலும் கிடைக்காத சூழலை அறிந்த அவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையிடம் பணத்தை மீட்டு தரும்படி புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி மனோகரனுடைய ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் பணத்தை மீட்டு அதன் ஆவணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தொழில் ரீதியாக இணையத்தில் வியாபாரம் செய்யும் போது நிறுவனம் பற்றி நன்கு அறிந்தும் விற்பனை செய்பவர்களின் உண்மை தன்மையை ஆராய்ந்தும் செயல்படும்படி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சைபர் கிரைம் புகார்களை சைபர் கிரைம் இணையதளத்திலோ 1930 என்ற தொலைபேசி எண்ணிலோ உடனடியாக புகார் அளிக்க மாவட்ட காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏவை கடத்திய அதிமுக நிர்வாகி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது