சென்னை: திருவொற்றியூரில் மாநகரப் பேருந்தில் பயணம்செய்த பெண்ணிடமிருந்து, செயினைப் பறித்துக்கொண்டு தப்பியோடிய கொள்ளையனுக்கு பொதுமக்கள் அடி உதை கொடுத்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை பாரிமுனையிலிருந்து மணலி நோக்கிச் செல்லும் பேருந்து ஒன்று மாட்டு மந்தை மேம்பாலம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, அதில் பயணம்செய்த ரயில்வே பெண் ஊழியர் தவமணி (51) கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்கச் சங்கிலியை, அடையாளம் தெரியாத நபர் பறித்துக்கொண்டு, ரயில்வே இருப்புப் பாதையில் ஓடியுள்ளார்.
இதையடுத்து, தவமணி கூச்சலிடவே உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பேருந்தில் இருந்தவர்கள், கொள்ளையனை விரட்டிச் சென்று, மடக்கிப் பிடித்தனர்.
காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திருவொற்றியூர் உதவி ஆய்வாளர் காதர் மீரா உள்ளிட்ட காவல் துறையினர், குற்றவாளியை கைதுசெய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், தண்டையார்பேட்டை விநாயகபுரத்தைச் சேர்ந்த நவீன்குமார் (41) என்பதும், குடிபோதையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிலதிபரின் வீட்டில் 20 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை