சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்று அறிகுறிகள் உள்ள நபர்களைக் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ள ஏதுவாக கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி முதல் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு உள்பட்ட 200 வார்டுகளிலும், ஒரு வார்டிற்கு இரண்டு காய்ச்சல் முகாம்கள் என 400 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தக் காய்ச்சல் சிறப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை, உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறித்து பரிசோதனை செய்யப்படும். கரோனா தொற்றின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் உள்ள நபர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் அறிகுறி உள்ள நபர்களுக்கு கபசுரக் குடிநீர், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தற்போது வரை 1,29,324 முகாம்கள் நடத்தப்பட்டு, 65,92,859 நபர்கள் இம்முகாம்களில் பங்கு பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களில் 18,46,773 நபர்களுக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மாவட்டங்களிடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயம்!