சென்னை : நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று (செப்.12) நடைபெற்றுவருகிறது. அதன்படி மயிலாப்பூரிலுள்ள பிஎஸ் சீனியர் செகன்ட்ரி மேல்நிலைப் பள்ளியில் 480 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாணவர்கள் காலை 11 மணி முதல் தேர்வு மையத்திற்குள் பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
மதியம் சரியாக ஒன்று முப்பது மணி அளவில் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தலின் அடிப்படையில் தேர்வு மையத்தின் கதவு மூடப்பட்டது. அப்போது, மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் மாணவர் மெய்யழகன் நான்கு நிமிடங்கள் தாமதமாக 1.34 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்துள்ளார்.
ஆனால் அலுவலர்கள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து, மாணவர் மெய்யழகனை உள்ளே அனுமதிக்க வேண்டும் என வெளியில் இருந்த பிற மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தினர்.
இருப்பினும் தேர்வு மையத்தின் அலுவலர் நேரம் கடந்துவிட்டதால் மாணவரை உள்ளே அனுமதிக்க முடியாது என அதனை நிராகரித்தார்.
மேலும், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அலுவலர் ஒத்துக்கொள்ளாததால் வேறு வழியின்றி மெய்யழகைனை இருசக்கர வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாணவர் கூறும்போது, ”நான் வரும்போது சிறிது விபத்து நடைபெற்றது. அதனால் கால தாமதம் ஏற்பட்டது” என கூறினார்.
நான்கு நிமிடங்கள் தாமதமாக வந்த மாணவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியது அங்கிருந்த பெற்றோரை மட்டுமின்றி பலரையும் அதிர்ச்சிக்கும் கொந்தளிப்புக்கும் ஆளாக்கியுள்ளது.
இதையும் படிங்க : நீட் தேர்வு - மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டி விதிமுறைகள்!