இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாததால், அப்பிரிவைச் சேர்ந்த 10 ஆயிரம் மாணவர்கள் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழந்திருப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் பிற பிற்படுத்தப்பட்ட பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் பேரில் இந்த நடவடிக்கையை ஆணையம் மேற்கொண்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் இளநிலை & முதுநிலை மருத்துவப் படிப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 10 ஆயிரம் இடங்கள் பறிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில் பெரும் திருப்பம் ஏற்படும் என்று ஆணைய அலுவலர்கள் கூறியுள்ளனர்.
ஒருவேளை மத்திய சுகாதார அமைச்சகம் முன்வைக்கும் வாதத்தை ஏற்றுக்கொண்டால், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் இருந்து அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய அரசின் கொள்கைப்படி 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போல, மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் இடங்களுக்கு அந்தந்த மாநிலங்களில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து பெறப்படும் இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவதே சரியானதாக இருக்கும். 27 விழுக்காடு ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
நடப்பாண்டுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் ஏற்பட்ட பாதிப்பை சரி செய்யும் வகையில் கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். அதேபோல், அதற்கு முந்தைய இரு ஆண்டுகளில் ஓ.பி.சி. மாணவர்களுக்கு மறுக்கப்பட்ட இடங்களை பின்னடைவு இடங்களாக அறிவித்து, அதே எண்ணிக்கையிலான கூடுதல் இடங்களை உருவாக்கி அவற்றை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'மக்களுக்கு சிறு கடனை குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்' - ராமதாஸ் கோரிக்கை