சென்னை: கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தமிழ்நாடு விடுபட்டு வருவதையடுத்து,சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு விமானநிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாகத் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பயணிகள் மற்றும் விமான நிறுவனத்தினா் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மே மாதத்தில் சா்வதேச மற்றும் உள்நாட்டு விமானங்களில் பயணம் மேற்கொண்ட பயணிகளின் எண்ணிக்கை, 19 லட்சமாக அதிகரித்துள்ளது.
இதில், சென்னை விமானநிலையத்தில் மட்டும் அதிகபட்சமாக, 14.61 லட்சம் பணிகள் மே மாதத்தில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், கோவை விமானநிலையத்தில் 2.19 லட்சம் பயணிகளும், திருச்சி விமானநிலையத்தில் 1.12 லட்சம் பயணிகளும், மதுரை விமானநிலையத்தில் 90 ஆயிரம் பயணிகளும், துாத்துக்குடி விமானநிலையத்தில் 18 ஆயிரத்து 800 பயணிகளும் விமானப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2021 மே மாதத்தில் தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் மொத்தப்பயணிகளின் எண்ணிக்கை 2.81 லட்சமாக மட்டுமே இருந்தது.
அப்போது கரோனா வைரஸ் இரண்டாம் அலை தொற்று மிக அதிகமாக உச்சகட்டத்தில் இருந்ததால், உள்நாட்டு விமானப் பயணிகள் பலா், விமான பயணங்களை தவிா்த்துவிட்டனா். அதைப்போல் சா்வதேச விமானங்களில் வந்தே பாரத் மீட்பு விமானங்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால்,பயணிகள் எண்ணிக்கை அளவு குறைவாக இருந்தது.
ஆனால் மத்திய,மாநில அரசுகள் எடுத்த தீவிரமான நோய்த்தடுப்பு நடவடிக்கையால், 2021 ஜூன் மாதம் இறுதியிலிருந்து கரோனா வைரஸ் தொற்று தமிழ்நாட்டில் வேகமாக குறையத்தொடங்கிவிட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் விமானப் பயணிகள் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் உள்ள விமானநிலையங்களில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பயணிகள் எண்ணிக்கை, 17.35 லட்சம் ஆகும். ஆனால் மே மாதம்,19 லட்சம். எனவே ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், மே மாதத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.65 லட்சம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்போது தமிழ்நாட்டில் சென்னை,செங்கல்பட்டு உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா வைரஸ் தினசரி பாதிப்பு கணிசமாக அதிகரித்து வந்தாலும், அதனால் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள உள்நாடு,சா்வதேச விமானங்களில் பயணிகள் எண்ணிக்கை குறையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரூ. 2 கோடி மதிப்பிலான கஞ்சா அழிப்பு