வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டுவருகிறார். பரப்புரையை முடித்துக் கொண்டு ஆம்பூர் அடுத்த மேட்டுக்கொல்லை பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று திமுக வேட்பாளருக்கு ஸ்டாலின் ஆதரவு திரட்டினர். உரிய அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், ஆம்பூர் தேர்தல் அலுவலர் சுஜாதா தலைமையிலான அலுவலர்கள் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படும் திருமண மண்டபத்தை பூட்டி சீல்வைத்தனர்.
மேலும் அனுமதியின்றி ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தை நடத்த இடமளித்ததால், மண்டபத்திற்கு சீல்வைத்ததாகவும் தேர்தல் அலுவலர் சுஜாதா விளக்கமளித்தார். கூட்டம் முடிந்து அனைவரும் சென்ற பின்னர் வந்து மண்டபத்துக்கு சீல் வைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியருடன் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற நிலையில்தான் திமுகவினரின் கூட்டம் குறித்த தகவல் கிடைத்ததாகவும் அங்கிருந்து வருவதற்குள் கூட்டம் முடிந்துவிட்டதாகவும் கூறினார்.
இந்நிலையில் திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் மண்டபத்திற்கு எந்த அறிவிப்புமின்றி சீல்வைக்கப்பட்டுள்ளதால், திருமண நிகழ்ச்சிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக சீலை அகற்ற உத்தரவிடுமாறும் கோரிக்கைவைக்கப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.