சென்னை: அயனாவரம் ஏகாங்கிபுரம் பகுதியை சேர்ந்தவர் வாணி (41). இவரது கணவர் ரமேஷ் (38) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வாணி சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் வாணி அடிக்கடி செல்போன் பேசி வந்ததால் அவரது கணவர் ரமேஷ் சந்தேகமடைந்து வாணியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதே போல கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி கணவர் மனைவிக்குள் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரத்தில் கணவர் ரமேஷ் வாணியை கொலை செய்துவிட்டு மனைவியின் உடலை துணிகளை மூடி மறைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டில் துர்நாற்றம் வீசவே, அவரது மகன் எதனால் என வீடு முழுவதும் தேடிய போது வாணி அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வாணியின் தாய் சுலோச்சனா ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான ரமேஷை ஓட்டேரி காவல் ஆய்வாளர் ஜானிசெல்லப்பா தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
குறிப்பாக ரமேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரது சொந்த ஊரான உசிலம்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் அவரை தேடிய போதும் தலைமறைவான ரமேஷ் குறித்த ஒரு துப்பும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் ரமேஷ் செல்போன் பயன்படுத்தி யாரையும் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால், போலீசார் ரமேஷை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் போலீசார் துப்பு கிடைக்காமல் தவித்து வந்ததைத் தொடர்ந்து, ரமேஷ் அவரது மகனின் நண்பர் ஒருவருக்கு ஜிபே மூலமாக பணம் அனுப்பியதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் அதில், அவருக்கு அனுப்பிய பணம் பிச்சை எடுத்து சம்பாதித்த பணம் என குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ரமேஷ் அனுப்பிய வங்கி கணக்கு எண்ணை வைத்தும், பிச்சை எடுத்து பணம் அனுப்பியதாக கூறியதால் இந்தியாவில் உள்ள பிரசித்திப்பெற்ற கோவில்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக ஆந்திரா திருப்பதி கோவில், பெங்களூருவில் உள்ள கோவில், திருப்பூர், திருத்தணி, திருவண்ணாமலை, வடலூர், சதுரகிரி மலை உள்ளிட்ட பல கோயில்களில் ரமேஷை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி உள்ளனர்.
இதற்கிடையே வங்கி கணக்கை போலீசார் ஆய்வு செய்து, அது ரமேஷின் நண்பரின் வங்கி கணக்கு என்பது உறுதியானதும் அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ரமேஷ் சாமியாராக மாறிவிட்டதாகவும், டெல்லியில் உள்ள அஜ்மேரி கேட் பகுதியில் உள்ள ஸ்ரீ ஹரிஹர் உதாசீன் ஆசிரமத்தில் தங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஒன்றரை வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த ரமேஷை டெல்லியில் உள்ள ஸ்ரீ ஹரிஹர் உதாசின் ஆசிரமத்தில் வைத்து நேற்று (ஜூலை 7) ஓட்டேரி தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது காவல் துறை தரப்பில், ரமேஷ் தலைமுடி, தாடி மற்றும் காவி உடையுடன் சாமியார் போல சுற்றுவதாக கிடைத்த துப்பின் அடிப்படையில் டெல்லி சென்று அவரை கைது செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ரமேஷை டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் ட்ரான்ஸ்சிட் வாரண்ட் பெற்றுக்கொண்டு காவல் துறையினர் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை கொலை செய்துவிட்டு சாமியாராக மாறி தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த ஓட்டேரி போலீசாருக்கு உயர் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்டியலின மாணவன் பள்ளியில் தண்ணீர் அருந்த தடை.. மாணவனை ஆசிரியர் அடித்ததாக பெற்றோர் புகார்..