சென்னை: ஓட்டேரி மங்களபுரம் ஒன்பதாவது தெருவில் சொந்த வீட்டில் வசித்து வருபவர், பவித்ரா(29). இவரது பாட்டி நளினி, இவர்களிடம் உள்ள 5 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். இவரின் ஒரு வீட்டில் கடந்த 15 ஆண்டுகளாக பலராமன் (49) என்பவர் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் பலராமன் சரியாக வாடகை பணத்தை செலுத்தாததால் வீட்டினை காலி செய்யுமாறு பவித்ராவின் பாட்டி நளினி கூறியுள்ளார்.
காலி செய்யச் சொன்னதால் தகராறு: இதனால் வீட்டின் உரிமையாளருக்கும் பலராமன் குடும்பத்தினருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் பலராமனின் மனைவியைத் தகாத வார்த்தைகளால் வீட்டின் உரிமையாளர் நளினி திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பலராமன், வீட்டின் உரிமையாளர் நளினியை கையால் தாக்கி கழுத்தை நெருக்கியுள்ளார். இதனால் நளினி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் பலராமனை தடுத்து, நளினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் பலராமனை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.