சென்னை: கோயம்பேடு 100 அடி சாலை மற்றும் காளியம்மன் கோயில் சாலை சந்திப்புகளில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்பகுதியில் வாகனங்கள் கடந்து செல்ல மணிக்கணக்கில் கால விரயம் ஏற்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இந்த கடும் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 100 அடி சாலை, காளியம்மன் கோயில் சாலை, புறநகர் பேருந்து நிலைய நுழைவாயில் சந்திப்புகளை இணைத்து புதிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை சார்பில் முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகளுக்காக அரசு ரூ.94 கோடி ஒதுக்கீடு செய்தது.
தற்போது, இறுதிக் கட்ட மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக விரைவில் இந்த புதிய மேம்பாலம் திறக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது, "சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிதாக 5 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, மத்திய கைலாஷ் சந்திப்பில் ராஜூவ் காந்தி சாலை (ஓ.எம்.ஆர்) மற்றும் சர்தார் படேல் சாலையை இணைக்கும் விதமாக ரூ. 56 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணிகள் இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கப்படவுள்ளன.
அதேபோல், மவுண்ட் பூந்தமல்லி சாலையில் ராமாபுரம், முகலிவாக்கம் சந்திப்புகளில் 3.14 கி.மீ தூரத்திற்கு உயர்மட்ட மேம்பாலமும், மவுண்ட் மேடவாக்கம் சாலை மற்றும் உள்வட்ட சாலை சந்திப்புகளில் கீழ்ப்பாலம் ஆகிய 2 பாலங்களும் ரூ.403 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளன.
இதனை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைந்து இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் தொடங்கப்படவுள்ளன. தாம்பரம் பகுதியில் சுரங்கப்பாலம், இணைப்பு சாலை உள்ளிட்ட பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்படவுள்ளன" என்றனர்.
இதையும் படிங்க: காவலர்களை நேரில் வரவழைத்துப் பாராட்டிய டிஜிபி