சென்னை: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் போதுமான மழையின்றி கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.
இதனால் நிலத்தடி நீர் மட்டமும் குறைந்ததால், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது.
மழை நீர் சேகரிப்பு
இதனைக் கருத்தில் கொண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு பல்வேறு நீரியல் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, மழை நீர் சேகரிப்பு என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தின்படி வீடுகள், பெரிய வணிக வளாகங்கள், அரசு கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
சென்னை குடிநீர் வழங்கல் வாரியம் இந்த திட்டத்திற்கு கண்காணிப்பு அமைப்பாக இருக்கிறது. இந்த திட்டம் 2003ஆம் ஆண்டு முழு வீச்சில் அமல்படுத்தப்பட்டாலும் படிப்படியாக விழிப்புணர்வு குறைந்தது.
தற்போது அரசு கட்டடங்களில்கூட மழைநீர் சேகரிப்புத்தொட்டிகள் இருப்பதில்லை. அப்படியே இருந்தாலும் அந்தத் தொட்டிகள் இடிந்து காணப்படுகிறது என நீரியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தொட்டிகள் அமைக்கும் பணி
"சென்னையில் தற்போது நிலத்தடி நீர் அளவு உயர்ந்திருந்தாலும், மழை நீர் சேகரிப்பு திட்டம் வரும் காலங்களில் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும்.
நகரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு நெருங்கும் சூழ்நிலையில் சென்னை நகரத்திற்குள்ளேயே உள்ள நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளலாம்.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் பெருநகர மாநகராட்சியுடன் சேர்ந்து இடங்களை அடையாளம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
மேலும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கும் பணி தீவிரமடைந்துள்ளது" என சென்னை குடிநீர் வாரிய அலுவலர் தெரிவித்தார்.
தேவைப்படும் போதெல்லாம் குடிநீர்
இதுகுறித்து நீரியல் நிபுணர் சரவணன் நம்மிடம் கூறுகையில், "கல்வி நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்துவது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இதன் மூலம் ஒரு கணிசமான அளவு நீரைத் தேவையான காலங்களில் எடுத்துக்கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு ஏக்கரில் 40 லட்சம் லிட்டர் நீர் மழைநீர் சேகரிப்பு மூலம் எடுக்க முடியுமெனில், 100 ஏக்கரில் 4,000 லட்சம் லிட்டர் நீர் எடுக்கமுடியும். எனவே, இந்த திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் குடிநீர் தேவைப்படும்போதெல்லாம் நிலத்தடி நீரை எடுத்துக் கொள்ள முடியும்" என்றார்.
குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு விநியோகம்
கடந்த காலங்களில் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டபோதெல்லாம், புறநகர்ப் பகுதிகளில் உள்ள விவசாய ஆழ்துளைக்கிணறுகள், கல்குவாரிகள் ஆகியவற்றில் உள்ள நீரை எடுத்து சுத்திகரித்து விநியோகம் செய்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இதையும் படிங்க: ஜிகா வைரஸை கண்டறிய ஆய்வகம் தயார் - ராதாகிருஷ்ணன் தகவல்