திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கபட்டதற்கும், தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அவமதிக்கபட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய திருமாவளவன், “இந்து மதம் பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகுதான் முழுமை பெறுகிறது. எனவே வள்ளுவர் பிறந்த காலத்தில் இந்து மதம் என்ற ஒன்று இருந்திருக்க வாய்ப்பேயில்லை. சமணர்கள் திருவள்ளுவர் தங்கள் மதத்தை சார்ந்தவர்கள் என்று கூறும்போதும், திருவள்ளுவர் தங்கள் மதத்தைச் சார்ந்தவர் என்று பவுத்தர்கள் கூறும்போதும், இஸ்லாமியர்கள் வள்ளுவருக்கு தொப்பி போடும்போதும் எதிர்க்காத திருமாவளவன், வள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்று கூறும்போது மட்டும் ஏன் எதிர்க்கிறார் என்று கேட்கிறார்கள்.
ஏனென்றால், உலகத்தில் இந்து மதத்தில் மட்டும்தான் பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற கோட்பாட்டை கொண்டிருக்கிறது. மேலும் மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வை கற்பிக்கிறது. இந்து மதத்தின் கோட்பாடு இப்படியிருக்கையில் ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறும் வள்ளுவர் மீது இந்து சாயம் பூசுவது என்பது திருக்குறளின் அடிப்படை கோட்பாட்டிற்கே எதிராக அமைகிறது என்பதால்தான் எதிர்க்கிறோம்” என்றார்.
இதையும் படிங்க: ஸ்டாலினை பாராட்டிய திருமாவளவன்!