இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிசெய்திருக்கும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு நன்றியும், வரவேற்பும்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மத்திய தொகுப்பிற்கு அளிக்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 50 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கில், இடஒதுக்கீடு வழங்கப்பட எந்த ஒரு சட்ட ரீதியிலான தடையும் இல்லை, இடஒதுக்கீடு அளிக்கப்பட மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அதிமுக நன்றியுடன் வரவேற்கிறது.
சமூகநீதி காத்த வீராங்கனை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் அதிமுக பணியாற்றுவதை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இத்தீர்ப்பு அமைந்திருப்பதைப் பெருமையுடன் வரவேற்கிறோம்.
மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் அடங்கிய குழுவை அமைத்து, இடஒதுக்கீடு குறித்த முடிவை மூன்று மாதங்களுக்குள் மேற்கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது இத்தீர்ப்பின் பலன்கள் விரைவில் நடைமுறைக்கு வர வழிவகை செய்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டி, அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட அயராது உழைப்போம் என்ற அதிமுக கொள்கைக்கு கிடைத்த பரிசாக இத்தீர்ப்பினைப் போற்றி வரவேற்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.