திண்டிவனத்தில் செப்டம்பர் 18, 2018ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் பழனிசாமி மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அவதூறாக பேசியதாக அவர் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து , ஜூன் 4ஆம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்து.
இதையடுத்து, சம்மனை ரத்து செய்யக் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் கனிமொழி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராஜமாணிக்கம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிப்பதாகவும், கனிமொழி ஆஜராவதற்கு விலக்கு அளித்தும் உத்தரவிட்டார். மேலும், வழக்கு குறித்து தமிழக அரசு நான்கு வாரங்களில் பதிலளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.