சென்னை: கிண்டி காவல் நிலையத்தில் சரித்திரப்பதிவேடு குற்றவாளியான கடல் ஜோதி மீது கொலை , கொலை முயற்சி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. மேலும் கிண்டி ரயில் நிலையம் அருகே சைக்கிள் ஸ்டாண்ட், ரியல் எஸ்டேட் , கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடல் ஜோதிக்கு கிண்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் சில காவலர்கள் உதவியாக இருப்பதாகவும், கடல் ஜோதி பற்றி உயர் அதிகாரிகள் விசாரிப்பதை பற்றி அவருக்கு சில காவலர்கள் தகவல் தெரிவித்ததாகவும், நேற்று ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், அது தொடர்புடைய தலைமை காவலர்கள் ஏகாம்பரம், திருமால் ஆகிய இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கிண்டி காவல் நிலைய உதவி ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் காவலர் திருமால் என்பவர் ரவுடி கடல் ஜோதிக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஜோதி குறித்து சமீபத்தில் உளவுத்துறையினர் அடுக்கடுக்கான ரிப்போட்களை போட்டு குவித்துள்ளனர். ஆனாலும் கடல் ஜோதி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
காவலர் திருமாலின் ஆதரவு இருப்பதால் தான் இவர் மீதும் ரவுடிகள் ஒழிப்பு பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு காவல் துறையினர் பல்வேறு ரிப்போட்களை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமாலை மாதந்தோறும் ஜோதி நன்கு கவனிப்பதாகவும் அதனால் அவர் மீது தூசி கூட விழாமல் பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கடல் ஜோதியோடு கிண்டி காவலர் திருமால், தலைமைக் காவலர் ஏகாம்பரம் ஆகியோர் பேசும் ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. கடந்த தேர்தலின் போது பேசப்பட்டதாக கூறப்படும் அந்த ஆடியோவில், கேங்ஸ்டர் டீம் விசாரிக்கும் போது நல்லவிதமாக தெரிவித்ததாகவும் , கல்லீரல் பிரச்சனை இருப்பதாகவும் தெரிவித்ததாக தொடங்கும் உரையாடல் 6 ஆயிரம் சதுர அடியில் நிலத்தில் கட்டப்படும் வீட்டில் ஒன்றை திருமாலுக்கு தர இருப்பதாக பேசுவது போல முடிவுறுகிறது.
அதேபோல தலைமைக் காவலரான ஏகாம்பரம் கூலிப்படை தலைவன் மதுரை பாலாவிற்கு, கடல் ஜோதி அடைக்கலம் கொடுத்தது தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டது பற்றி தெரிவிக்கும் ஆடியோவும் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ரவுடியின் தொடர்பில் இருந்த இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 1 வருடம் பழமையான ஆடியோ தற்போது ஏன் வெளியிடப்பட்டது? வேறு எந்தெந்த அதிகாரிகளுக்கு இதில் தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: மனைவியை கழுத்து அறுத்துக்கொலை செய்த கணவன் போலீஸில் சரண்