சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மருத்துவப் பணியாளர் வாரியத்தின் மூலம் 7 ஆயிரத்து 243 செவிலியர்கள் ஒப்பந்த முறையில் பணி அமர்த்தப்பட்டனர். பணியில் சேர்ந்து இரண்டு வருடத்தில் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 2017ஆம் ஆண்டு அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என செவிலியர்கள் சங்கம் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களுக்கு அரசு நிதியில் இருந்து ஊதியம் வழங்கப்படுவதாகவும், மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு தற்போது 18 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சேதமடைந்த கட்டடங்களில் அதிகாரிகள் குடியிருப்பீர்களா? சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
அதேபோல், ஒப்பந்த செவிலியர்கள் விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்த தமிழ்நாடு அரசின் குழு அளித்த அறிக்கையில், மத்திய அரசின் நிதியில் இருந்து நியமிக்கப்பட்ட ஒப்பந்த செவிலியர்களின் பணி, பொறுப்பு உள்ளிட்டவை அரசு செவிலியர்களின் பொறுப்புக்கு வித்தியாசம் உள்ளதாக கூறப்பட்டு உள்ளதால், அந்த அறிக்கையை ஏற்று, அரசு செவிலியர்களுக்கு இணையாக ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கான சாத்தியம் இல்லை எனவும் அரசு தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
அதேநேரம், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை 4 ஆயிரத்து 12 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளதாகவும், ஓய்வு வயது அதிகரித்து உள்ளதால் கடந்த இரு ஆண்டுகளாக காலிப் பணியிடங்கள் உருவாகவில்லை எனவும், பணி ஓய்வு, பதவி உயர்வு காரணமாக அடுத்து வரும் ஆண்டுகளில் ஆயிரத்து 283 காலிப் பணியிடங்கள் ஏற்பட உள்ளதாகவும், அந்தப் பணியிடங்களில் ஒப்பந்த செவிலியர்களும் நியமிக்கப்படுவர் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: மா.பா.பாண்டியராஜன் வெற்றி செல்லும்; ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!