உலகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரோபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள்.
இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து நான்காயிரத்து 464 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தப் புனித ஹஜ் பயணத்திற்காக சென்னையிலிருந்து முதல் விமானம் நேற்று சவுதிஆரேபியா ஜித்தா நகருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 213 பெண்கள் உள்பட 423 பேர் பயணம் செய்தனர்.
புனித ஹஜ் பயணம் சென்றவர்களை தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் சால்வை அணிவித்து வழியனுப்பிவைத்தார். சென்னையிலிருந்து ஹஜ் பயணிகளுக்காக வருகிற 5ஆம் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் கூறுகையில், தமிழ்நாட்டிலிருந்து இந்த ஆண்டு நான்காயிரத்து 464 பேர் புனித ஹஜ் பயணத்திற்குச் செல்கின்றனர். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.6 கோடியை மானியமாக வழங்கியுள்ளார். இதில் ஒவ்வொரு பயணிக்கும் ரூ. 16 ஆயிரம் மானியமாக கிடைக்கும் என்றார்.