சென்னை அடுத்த குரோம்பேட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. தினந்தோறும் சென்னை புறநகர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த மருத்துவமனையைப் பயன்படுத்தி வருகின்றனர். 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாக தங்கி சிகிச்சைப்பெறும் வசதியும் உள்ளது.
இம்மருத்துவமனையில் மாதந்தோறும் 250 முதல் 300 பிரசவம் நடக்கிறது. மேலும் 24 மணி நேர விபத்து சிகிச்சைப்பிரிவும் உள்ளது. மேலும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த சென்ற ஆண்டு நிதிகள் ஒதுக்கப்பட்டன. இந்தநிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரமின்றி இருப்பதாகவும், நோய்ப்பரவும் இடமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கழிவுகள், சிகிச்சைப்பெறுபவர்களுக்கு அளிக்கப்படும் பேட்ஜ், நோயாளிகளுக்குப்பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில்கள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக்கழிவுகள் அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டுக்கு அருகே கொட்டப்பட்டுள்ளன.
அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகள் நிரம்பி அதனருகே சாலையிலும் கொட்டப்பட்டுள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கும், அங்கு சிகிச்சைப்பெற்று வரும் பிரசவ வார்டு நபர்களுக்கும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.
மருத்துவமனையில் குப்பைத்தொட்டியில் கொட்டப்படும் மருத்துவக்கழிவுகள் குப்பைத்தொட்டி நிரம்பி சாலையில் கொட்டப்படும் நிலையிலும் மருத்துவமனை நிர்வாகம், இதனைக்கண்டு கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக மருத்துவமனையில் கொட்டப்படும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி மருத்துவமனை வளாகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:"அரசு மருத்துவமனைகளில் காலாவதியாகாத மருந்துகள் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்"