சென்னை: அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் வலிநிவாரணி (Pain killer) மாத்திரையை இளைஞர்களுக்கு போதைக்காக விற்பனை செய்வதாக கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் தனிப்படை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவயிடத்திற்குச் சென்ற காவல் துறையினர் சம்மந்தப்பட்ட நபரிடம் செல்போனில் போதை மாத்திரை வேண்டும் என கேட்டுள்ளனர்.
உடனே போதை மாத்திரையுடன் அங்கு வந்த நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரது வீட்டிற்குச் சென்று சோதனை நடத்திய காவல் துறையினர், வீட்டில் பதுக்கி வைத்திருந்த 510 நைட்ரவேட் மாத்திரை,100 டைடெல் மாத்திரையை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிடிபட்ட நபரைத் தனிப்படை காவல் துறையினர் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் கீழ்பாக்கம் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட நபர் அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்த முனியசாமி (20) என்பது தெரியவந்தது.
மேலும், 10ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் முனியசாமிக்கு போதிய வருமானம் கிடைக்காததால் வலி நிவாரணத்திற்கு பயன்படுத்தும் மாத்திரைகளை சட்டவிரோதமாக வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து இளைஞர்களுக்கு போதைக்காக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி