சென்னை: அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளிகல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் உயர்தர கல்லூரிகளில் சேர்வதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன எனப் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் லேப் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் வினாடி வினாப் போட்டி நடத்தப்பட உள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்கள் மாலை 4 மணிக்கு பின்னர் இந்த வினாடி வினா போட்டிகளில் பங்கேற்கலாம். மாணவர்கள் பொதுத் தேர்விற்கு பின்னரும் பங்கேற்கும் வகையில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். சுழற்சி முறையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் பணியில் இருக்க வேண்டும்.
மாணவர்கள் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வுக்குத் தயாராகும் வகையில் கணினி வழியில் வினாடி வினா போட்டி நடத்தப்படும். மாணவர்கள் இந்த தேர்வுகளை எதிர்கொள்ள பயனுள்ளதாக இருக்கும். விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிகளில் உள்ள ஹைடெக் லேப் பயன்படுத்தி போட்டியில் பங்குபெறலாம்.
செவ்வாய் மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இந்த பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. கணக்கு, அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்கலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வினாடி-வினா போட்டி நேற்று (ஏப்.12) செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு