சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலம் கோட்டூர்புரம், காந்தி நகரில் அடையாறு ஆற்றங்கரையோரம் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா மற்றும் விளையாட்டுத் திடலில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு IAS இன்று (ஜூன் 11) ஆய்வு செய்தார்.
காந்தி நகர் பூங்காவில் ரூ. 9.41 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்தல், சேதமடைந்த சுற்றுச்சுவரை புனரமைத்தல், செடிகளுடன் கூடிய நடைபாதை அமைத்தல், குடிநீர் வசதி மற்றும் மின் வசதி, பசுமையுடன் புல்வெளிகள் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், அறிவிப்பு பலகைகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், வேலி அமைத்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பூங்காவில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி நல்ல முறையில் உள்ளதா? எனப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவில் உள்ள நடைபாதைகளை நல்ல முறையில் பராமரிக்கவும், கூடுதலாக கழிப்பறைகள் கட்டவும், உடற்பயிற்சிக் கூடம் அமைக்கவும், புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, வார்டு 173க்கு உட்பட்ட கனால் பேங்க் சாலை, பாட்ரிசியன் கல்லூரி அருகில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் 4.99 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் அடர்வனத்துடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானத்தில் 1,402 மரக்கன்றுகள் நடும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றங்கரையோரங்களில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் ரூ. 5.40 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க. பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரை 2.4 கி.மீ. நீளத்திற்கு நடப்பட்டுள்ள 35,785 மரக்கன்றுகள் மற்றும் எம்.ஆர்.டி.எஸ். முதல் கோட்டூர்புரம் பாலம் வரை ரூ.5.80 கோடி மதிப்பீட்டில் 2.2 கி.மீ. நீளத்திற்கு நடப்பட்டுள்ள 23,039 மரக்கன்றுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா திறக்கும் நேரம் குறித்து அறிவிப்பு பலகைகள் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் சார்பில் கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் கடல் பாதாம் (Almond tree), பூவரசு (portia tree), புங்கன் (Pongame oiltree), கடல் பூவரசு, கல்யாண முருங்கை (Erythrina variegata), உதயம் (Lannea coromandelica), மருத மரம் (Terminalia elliptica), கடல் திராட்சை (Latok), மந்தாரை (Bauhinia acuminata), புன்னை (Calophyllum inophyllum), முள்ளில்லா மூங்கில், தாழை (Pandanus flower), நாவல் (Syzygium cumini), வேம்பு (Azadirachta indica), அரசமரம் (Ficus religiosa), ஆலமரம் (Ficus benghalensis), மகிழம் (Mimusops elengi), சரக்கொன்றை (Cassia fistula), துலிப் மரம் (Liriodendron tulipifera), அத்தி (Ficus carica), அசோக மரம் (Saraca indica), மலை வேம்பு (Melia dubia), மூங்கில் (Bambusoideae), இலுப்பை (Madhuca longifolia), கொய்யா (Psidium guajava), அருநெல்லி (Phyllanthus acidus), நெல்லி (Phyllanthus emblica), கொடுக்காப்புளி (Pithecellobium dulce), சப்போட்டா (Manilkara zapota), பீநாறிச்சங்கு (Sterculia foetida), மருதாணி (Lawsonia inermis), கருநொச்சி (Vitex), நொச்சி (Chaste tree), கோரான், ஆவாரம் (Senna auriculata), எருக்கு (Calotropis), பதிமுகம் (Biancaea sappan), மயில் கொன்னை (Caesalpinia pulcherrima), செம்பருத்தி (Hibiscus rosa-sinensis), நித்திய கல்யாணி (Catharanthus roseus), அரளி (Nerium indicum Mill), மஞ்சள் அரளி (Allamanda nerrifolia), காட்டு கறிவேப்பிலை (Murraya koenigii), கற்பூரவள்ளி (Coleus amboinicus), துளசி (Ocimum tenuiflorum), வெட்டிவேர் (Chrysopogon zizanioides), அலையாத்தி உள்ளிட்ட 48 வகையான மரக்கன்றுகள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை கூவம் மற்றும் அடையாறு ஆற்றங்கரையோரங்களில் 1,22,460 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கோட்டூர்புரம் சித்ரா நகரில் அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளின் கட்டிடக் கழிவுகளை உடனடியாக அகற்றவும், ஆற்றங்கரைகளின் ஓரங்களை சமப்படுத்தி, பலப்படுத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர், ஆணையாளர் ராதாகிருஷ்ணன், இணை ஆணையாளர் (பணிகள்) சமீரன், துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஊராட்சி அளவில் சாதனை படைத்த 'குழிப்பிறை' - ஊராட்சி மன்றத் தலைவரின் அசத்தல் திட்டம்!