சென்னை: தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு திட்டத்தில் 10ஆம் வகுப்புப் பயிலும் 1000 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவருக்கும் 11ஆம், 12 ஆம் வகுப்புகளை நிறைவு செய்யும் வரை ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மேலும், இந்த மாணவர்களுக்கு ஐஐடி போன்ற தமிழ்நாட்டிலுள்ள முன்னணி கல்வி நிறுவனங்களில் தொடர்பயிற்சிகளும் வழங்கப்படும். இது மட்டுமல்லாமல், இத்திட்டத்தில் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியைத் தொடரும்பொழுதும் ஒவ்வோர் ஆண்டும் 12 ஆயிரம் ரூபாய் வீதம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணுவியல் செய்முறை குறித்த பயிற்சி அளிக்கவுள்ள நிலையில், பயிற்சி முடித்த அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சியின்போது, ஆசிரியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிடும் வகையில் சென்னை ஐஐடி-க்கும் பள்ளிக்கல்வித் துறைக்கும் இடையே தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், 250 அரசுப் பள்ளிகளின் 1 லட்சம் மாணவர்கள் மின்னணு சார்ந்த செய்முறைப்பயிற்சி பெற்று பயன்பெறுவார்கள்.
சென்னை ஐஐடி மூலமாக 250 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 500 அறிவியல் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக 1 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தயாரிக்கப்பட்ட மின்னணு செய்முறை பெட்டகங்களை, அப்பள்ளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ( ஏப்.05 ) வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ''தற்போதைய சூழ்நிலையில் கம்ப்யூட்டர் மட்டுமின்றி எலக்ட்ரானிக்ஸ் படிப்புகளும் தேவைப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் 9, 10, 11, 12ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் குறித்து கற்றுத் தருவதால், அவர்கள் பிற்காலத்தில் இந்த துறையில் ஆராய்ச்சியும் மேற்கொள்ள பயனுள்ளதாக அமையும். வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் பத்து லட்சம் எலக்ட்ரானிக்ஸ் பணியாளர்கள் தேவைப்படக்கூடிய சூழ்நிலை உள்ளது.
சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிப்போம். அப்பொழுது அவர்கள் பயிற்சியை பெற்று சிறப்பாகப் பேசினார்கள். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் ஐஐடி என்ற திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு ஒரு லட்சம் மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் குறித்து பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம்.
ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு 25 ஆயிரம் பேர் வருவார்கள் 3 ஆண்டில் படிக்கும் அடிப்படை மிண்ணனு கற்றுத் தந்து விடுவோம். மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் கிட்டில் ஆண்டிற்கு 25 செய்முறை வீதம் 4 ஆண்டுகளில் 100 செய்முறை செய்வார்கள். எலக்ட்ரானிக்ஸ் தமிழ்நாடு நெம்பர் ஒன் மாநிலம் என்ற நிலை அடையும்'' எனப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மிகுந்த மகிழ்ச்சியான மனநிலையில் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். நம் நாட்டினுடைய முன்னாள் பிரதமராக இருந்த பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஒரு தொலைநோக்கு உணர்வோடு இந்த கல்விக் கழகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பல மாணவர்களின் கனவுகளை மெய்ப்பிக்கக்கூடிய ஒரு சிறப்பான திட்டத்தை இன்று தொடங்கி வைப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இப்போது 'எல்லார்க்கும் எல்லாம்' என்ற ஒரு உன்னதமான நோக்கம் கொண்ட திராவிட மாடல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதன் பொருட்டும் எவருக்கும் எந்த வாய்ப்பும் தடுக்கப்படக் கூடாது. அனைவருக்கும் அனைத்து வாய்ப்புகளும் திறந்திருக்க வேண்டும். இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினுடைய நெறிமுறையாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் கல்வித் துறையில் அதிகமான கவனத்தை நாம் செலுத்திக் கொண்டிருக்கிறோம்.
கல்வி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைத்தால், அடுத்தடுத்து அனைத்து வாய்ப்புகளையும் அவர்கள் சமமாக பெற்றிட முடியும். ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காகவும், பள்ளிகளில் தரமான கற்றல் சூழலை உருவாக்கக்கூடிய வகையிலும் பல்வேறு வகையிலான முன்னேடுப்புகளை நாம் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். அனைத்துக் குழந்தைகளும் படிப்பதற்கான சிறந்த இடமாக அரசுப் பள்ளிகள் இன்று மாறி வருகிறது.
மாணவர்களுக்குத் தேவையான அறிவியல் அறிவினை வளர்த்துக் கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறது. அதற்கு எடுத்துக்காட்டாகத்தான் இந்த விழாவும் அமைந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் முதன்மையான கல்வி நிறுவனம் என்ற பெயரைப் பெற்றது இந்த IIT, சென்னை. IIT சென்னையில் சேர்ந்து உயர் கல்வி பயில்வதே தம் வாழ்வின் இலட்சியமாக நினைத்து, இலட்சக்கணக்கான மாணவர்கள் தங்களுடைய கற்றல் திறன்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
எனது கனவுத் திட்டமான 'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்புதான் இது. நான் முதல்வன் திட்டத்தைப் போலவே இந்த திட்டமும் பயனுள்ளதாக அமையப் போகிறது. அனைவருக்கும் IITM திட்டத்தின் முதற்கட்டமாக, IIT சென்னையில் நான்காண்டுப் படிப்பாக வழங்கப்படும் B.S. Data Science and Applications (தரவுப் பயன்பாட்டு அறிவியல்) பட்டப்படிப்பில் சேர தமிழ்நாட்டிலுள்ள 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 87 மாணவர்களில், 45 மாணவர்கள் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் அவர்கள் உயர் கல்வியைத் தொய்வின்றித் தொடர்வதற்கும் உதவி செய்வதே, இந்தத் திட்டத்தினுடைய நோக்கம். இந்த திட்டத்தின் வாயிலாக பத்தாம் வகுப்புப் பயிலும், 500 மாணவர், 500 மாணவியர் என 1000 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அனைவருக்கும் சென்னை ஐஐடி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு வழிகாட்டுதல் வழங்கப்படும். அவர்களுடைய பன்னிரெண்டாம் வகுப்பினை நிறைவு செய்யக்கூடிய வகையில், ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களுடைய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பை தொடரும் போதும் ஒவ்வொரு ஆண்டும் 12,000 ரூபாய் வீதம் உதவித் தொகையும் பெறுவர் என்பதை மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எதன் பொருட்டும் ஒருவரது வாய்ப்பு பறிபோகக் கூடாது என்று நான் தொடக்கத்திலே சொன்னேன். "அரசுப் பள்ளியில் படிக்கும் நமக்கு, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இணையான தனிப்பயிற்சிகள் கிடைக்கவில்லையே!?" என்ற ஏக்கம் யாருக்கும் இருக்கக் கூடாது. அதற்காகத் தான் இந்தத் திட்டம்.
சமூகத்தின் அனைத்துத் தரப்பின் அறிவு சக்தியும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதற்கு கல்வி - அறிவியல்பூர்வ கல்வி - பகுத்தறிவுக் கல்வி வேண்டும். கல்வி என்பது, வேலைக்குத் தகுதிப்படுத்துவதாக மட்டும் இருக்கக் கூடாது. மாணவர்களைத் தன்னம்பிக்கை உள்ள மனிதர்களாகத் தகுதிப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.
ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் அறிவாற்றலை மட்டுமல்ல, மன ஆற்றலையும் உருவாக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். மாணவர் திறனறித் தேர்வுத் திட்டத்தை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: நானும் டெல்டாக்காரன் தான்; நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு அனுமதிக்காது - முதலமைச்சர் உறுதி