சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ( 22.7.2022 ) தலைமைச் செயலகத்தில், மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ள 44 - வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மேலும் 2022-23 நிதியாண்டின் வருவாய் குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
கரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக குணமடைந்து ஓய்வில் இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து வழக்கமான பணிகளை மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்பு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 14ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
கரோனா அறிகுறியால் பரிசோதனை மற்றும் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், தொற்றில் இருந்து விடுபட அதற்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டது. அதன்படி, சிகிச்சை முடிந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஒரு வார காலத்திற்கு முதலமைச்சர் ஓய்வில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்கு முன்னதாக குடியரசு தலைவர் தேர்தலுக்கான சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முதல் நபராக வாக்களித்தார். அதன் தொடர்ச்சியாக வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனித்து வந்த முதலமைச்சர், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்தும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்துக்கு வருகை தந்து மாநிலத்தில் வரி வருவாய் பெருக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார், தொடர்ந்து அடுத்த மாதம் மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ . வீ . மெய்யநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் மா . மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ . இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா . முருகானந்தம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா செஸ் ஒலிம்பியாட் சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தகவல் தொழில்நுட்பவியல் துறை பெயர் மாற்றம் - அரசாணை வெளியீடு