அனைத்து மாநில, யூனியன் பிரதேசங்களின் எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சர்கள் மாநாடு மத்திய மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தலைமையில் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில், தமிழ்நாடு சார்பில் அமைச்சர் தங்கமணி மின்சார வாரிய தலைமை அலுவலகத்திலிருந்து பங்கேற்றார்.
இம்மாநாட்டில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் பங்கஜ் குமார் பன்சால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டவை குறித்து தமிழ்நாடு மின்வாரியம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "எந்தச் சூழ்நிலையிலும் தமிழ்நாடு மக்களுக்கு பாதகமான ஒரு திட்டம் அல்லது சட்ட திருத்தத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. மின்சார சட்டத்திருத்தத்தில் தேவையான திருத்தங்களை கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், மின்துறையின் சீர்த்திருத்தங்களை உள்ளடக்கிய புதிய மின் விநியோகத் திட்டங்கள், அவற்றின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை சீர்செய்யும் வகையில் நிதி நெருக்கடியில் உள்ள மின் பகிர்மான கழகங்களுக்கு கோவிட்-19 கால நிதி உதவியாக 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகை வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நிதி உதவி திட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மார்ச் 2020 வரை உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களின் நிலுவைத் தொகையை சரி செய்யும் வகையில் சுமார் 20 ஆயிரத்து 622 கோடி ரூபாய்க்கான விண்ணப்பங்களை மத்திய நிதி நிறுவனங்களான பவர் பைனான்ஸ், கார்ப்பரேசன், ரூரல் எலக்டிரிபிக்கேசன் கார்ப்பரேசன் வசம் சமர்பித்துள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுத்து நிதியினை விரைவில் வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது.
தமிழ்நாடு ஏற்கனவே அதிகளவு சூரிய, காற்றாலை மின் நிறுவுதிறன் பெற்றுள்ளதால், புதுப்பிக்கத்தக்க கட்டாய மின் கொள்முதல் அளவை திருப்திகரமாக பூர்த்தி செய்வது குறித்தும், வரும் காலங்களில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தாலும், மத்திய எரிசக்தித் துறையாலும் நிர்ணயிக்கப்படும் புதுப்பிக்கத்தக்க கட்டாய மின் கொள்முதல் அளவை பூர்த்தி செய்வது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி. துரைசாமி...! நடிகை நமீதாவுக்கு முக்கிய பொறுப்பு...!