சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஏப்ரல் 30ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'மலக்குழி மரணம்' என்ற தலைப்பில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி கவிதை ஒன்றை வெளியிட்டுப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. அந்த கவிதையில், இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் விடுதலை சிகப்பி பேசியதாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் சுரேஷ் அளித்தப் புகாரின் அடிப்படையில், பி.விக்னேஷ்வரன் என்கிற விடுதலை சிகப்பி மீது, அபிராமபுரம் காவல் நிலையத்தில் கலகத்தைத் தூண்டுதல், அச்சத்தை ஏற்படுத்துதல் உட்பட ஐந்து பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல், பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியும் காவல்துறையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி விடுதலை சிகப்பி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "கடவுள்களை அவமதிக்கும் வகையில் நான் பேசவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்குடன் போலியாக அளிக்கப்பட்டப் புகாரில் காவல்துறை என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. எனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதாடப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.ஜி.திலகவதி முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, காவல் துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையுடன், விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: குஜராத் மாடல் Vs திராவிட மாடல் - பிரதமரை காட்டமாக விமர்சித்த டிகேஎஸ் இளங்கோவன்