சென்னை திருவல்லிக்கேணி பி.பி.குளத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (24). ஆட்டோ ஓட்டுநரான இவர் மீது மைலாப்பூர் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், ஜனவரி 19ஆம்தேதி இரவு 11 மணியளவில் ராம்குமார் தனது நண்பர்களுடன் நடுக்குப்பம் அருகேயுள்ள நடேசன் சாலையில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த பத்துக்கும் மேற்பட்டோர் ராம்குமாரை கத்தி, உருட்டுக்கட்டை கொண்டு சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ராம்குமாரை அந்த கும்பல், ஆட்டோவில் கடத்தி சென்று நடுக்குப்பம் பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறைக்குள் வைத்து மீண்டும் தாக்கியதாகத் தெரிகிறது.
இதனையடுத்து, மயிலாப்பூர் துணை ஆணையர் சேகர் தேஷ்முக், மைலாப்பூர் உதவி ஆணையர் நெல்சன், ராயபேட்டை உதவி ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், நடுகுப்பத்தைச் சேர்ந்த குமார் என்பவர் தனது நண்பர்களுடன் வந்து ராம்குமாரை தாக்கிவிட்டு, ஆட்டோவில் கடத்தி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், ஜனவரி 20ஆம் தேதி ராம்குமார் கொல்லப்பட்டு கோயில் அருகே உள்ள ஒரு குட்டையில் கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் ராம்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். ராம்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய பிரேம் குமார் உட்பட கொலையில் ஈடுபட்ட அஸ்மத், ஜாஹீர் உசைன், அப்துல் ரஹீம், அப்பு, ஜெகன், அருண், ரஞ்சித், ராஜேஷ், சுபான், ரவி, இதற்கு உடந்தையாக செயல்பட்ட கோவளத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் உள்ளிட்ட 12 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ராம்குமாருக்கும் நடுக்குப்பத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இடையே சில வாரங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறானது கடந்த சில நாட்களுக்கு முன் கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. கடந்த 15ஆம் தேதி இரவு பிரேம்குமார் தனியாக வரும்பொழுது மது போதையில் இருந்த ராம்குமார் அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் கழுத்தைக் கிழித்துள்ளார்.
இதுகுறித்து பிரேம்குமார் ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, ராம்குமார் மீது ஐஸ் அவுஸ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகும் ராம்குமாருக்கும் பிரேம்குமாருக்குமான மோதல் தொடர்ந்துள்ளது. எனவே, பழிவாங்குவதற்காகவே பிரேம்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து ராம்குமாரை கடத்தி கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.