சென்னை நெற்குன்றம் பகுதியை சேர்ந்த திலீப் என்பவர் அவருடைய வீட்டுவாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் காணாமல்போனதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் இரு நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடி சென்னை எல்லை வரை கொண்டு செல்வது பதிவாகி இருந்தது. அடையாளங்களை வைத்து பார்த்தபோது இருசக்கர வாகனங்களை திருடியது பழைய குற்றவாளியான வேலூரை சேர்ந்த யுவராஜ் (32), அவரது கூட்டாளி சரத்பாபு (39) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரியவந்தது.
ஹீரோ ஸ்பிளென்டர் (Hero Splendor) இருசக்கர வாகனத்தை உடைத்து திருடுவது எளிதாக இருப்பதாலும், அதிக மைலேஜ் தருவதாலும் தொடர்ந்து திருடி வந்துள்ளனர். திருடிய இருசக்கர வாகனத்தை குடியாத்தம் பகுதிகளில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்றுள்ளனர்.
யுவராஜ் திருடிய 25 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்துவந்த யுவராஜின் கூட்டாளியான சரத்பாபுவை கோயம்பேடு தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அவர் வேலூரில் கைது செய்யப்பட்டார். திருடப்பட்ட 36 இருசக்கர வாகனங்களை சரத்பாபுவிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வேறு எங்கெல்லாம் இருசக்கர வாகனம் திருடியுள்ளனர் என்பது குறித்தும் சரத்பாபுவிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். யுவராஜையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆவின் தேர்வை ரத்துசெய்ய கோரிய வழக்கு தள்ளுபடி