சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று (ஜனவரி 12) செய்தியாளரைச் சந்தித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "அதிமுக அரசின் திட்டங்களை திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அபாண்டமான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
சமச்சீர் புத்தகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட தொடங்கி வள்ளுவரையே ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது அதிமுக ஆட்சியில்தான். கஜா புயல் நிவாரணத்தின்போது தனியார் தொண்டு நிறுவனங்கள் கொடுத்த நிவாரணப் பொருள்களில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டியது. அதிமுக ஆட்சியைப் போன்று ஸ்டிக்கர் ஒட்டும் ஆட்சி அல்ல திமுக.
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம், ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன் 95 விழுக்காடு பணிகள் நிறைவுற்ற நிலையில் ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் பின்னர் வந்த அதிமுக ஆட்சி தாங்கள் கொண்டுவந்தது போலும் கோயம்பேடு பேருந்து நிலையம், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டது. இன்றைக்கு திறக்க உள்ள விருதுநகர் மருத்துவக் கல்லூரியும் திமுக ஆட்சியில் அறிவித்ததுதான்" என்றார்.
'அடுத்தவர் பிள்ளைக்குச் சொந்தம் கொண்டாடாமல் இருங்கள்’ என எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "நீங்கள் பெற்ற பிள்ளைக்குப் பேரு வைத்தீர்களே, சோறு வைத்தீர்களா? எனக் கேட்கத் தோன்றுகிறது. திமுக கோடி சூரியனுக்கு இணையானது. அதன் ஒளி உதிரி நட்சத்திரங்களுக்குத் தேவைப்படுமே தவிர திமுகவுக்குத் தேவைப்படாது.
விதைக்கிற நேரத்தில் வெளியூர் சென்றுவிட்டு அறுக்கும் நேரத்தில் அரிவாளை தூக்கிவரும் நிலைபோல் உள்ளது எதிர்க்கட்சித் தலைவரின் பேட்டி" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் ஏற்பட்ட பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டு இன்றுமுதல் தொழிற்சாலை செயல்படத் தொடங்கியுள்ளது. முதலமைச்சரின் உத்தரவுப்படி தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கலை முன்னிட்டு போக்குவரத்து கழகப் பணியாளர்களுக்கு ‘சாதனை ஊக்கத்தொகை’