கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் பகுதியில் பிறந்த முகமது இஸ்மாயில், சட்டம் பயின்றவர். அரசியலில் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டுவந்த இவர், சுதந்திர இந்தியாவில் 1956ஆம் ஆண்டு நடைபெற்ற குளச்சல் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு நகர்மன்றத் தலைவராகத் தேர்வானார்.
பின்னர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்வானவர். அரசியல் பணி மட்டுமல்லாமல், சட்டப்பணி, பல்வேறு சமூகப் பணிகளும் இவர் ஆற்றியுள்ளார்.
நேர்மையான மூத்த அரசியல்வாதி எனப் பெயர் பெற்ற இவர் தற்போது மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருந்துவந்தார். இவர் சமீப காலமாக வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றிரவு (நவம்பர் 17) உயிரிழந்தார்.
இவரது மறைவிற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் இவரது மறைவுக்கு இரங்கல் செய்தியறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் முகமது இஸ்மாயில். 1956ஆம் ஆண்டில் குளச்சல் நகர சபை தலைவராகவும் 1980ஆம் ஆண்டில் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஜனதா தள கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்கள் பணியாற்றிவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகியவர். சமூக நல்லிணகத்திற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்.
வாழ்க்கையில் தனது உழைப்பால் படிப்படியாக உயர்ந்தவர். அவர் மறைந்த செய்தி அறிந்து துயரடைந்தேன். அவர் மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் ஆற்றிய பணிகள் மக்கள் மனத்தில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர் ஆத்மா சாந்தியடையவும் அவருடைய மறுமை வாழ்வு எல்லா வல்ல இறைவனின் திருப்பொருத்தத்தை கொண்டதாகவும் அமைய வேண்டிக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.