சென்னை: தமிழ்நாட்டிற்கும், தமிழின வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு இந்தாண்டு முதல் 'தகைசால் தமிழர்' என்ற விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ், ரூ. 10 லட்சம் ஆகியவை சுதந்திர தினத்தன்று முதலமைச்சர் வழங்குவார் எனவும் அறிவிக்கப்பட்டது.
விருதினை வழங்கினார் ஸ்டாலின்
அந்த வகையில், தகைசால் தமிழர் விருதுக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், என். சங்கரய்யாவை தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுத்திருந்தது. வயதுமூப்பு காரணமாக நாளை (ஆக 15) நடைபெறும் சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ள இயலாத சூழல் சங்கரய்யாவுக்கு இருந்தது.
இந்நிலையில், இன்று (ஆக 14) சங்கரய்யாவின் வீட்டிற்கு நேரில் சென்று, அறிவிக்கப்பட்ட தகைசால் விருதையும், ரூ. 10 லட்சத்தையும் என். சங்கரய்யாவிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது, அமைச்சர்களான துரைமுருகன், பொன்முடி, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டவர்களும், சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் உடனிருந்தனர்.
முன்னதாக, தனக்கு தகைசால் விருதுமூலம் கிடைக்கும் பணத்தை கரோனா நிவாரண நிதிக்கு வழங்குவதாக என். சங்கரய்யா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்மதமும் சம்மதம்- அருணகிரி நாதர் மாஸ் பேச்சு!